மாநிலங்களவைக்கு காலியாக உள்ள 2 எம்பி பதவிக்கு அக். 4ல் தேர்தல்
9/9/2025 5:22:18 PM
புதுடெல்லி: மாநிலங்களவையில் தமிழகத்திற்கான காலியாக உள்ள 2 எம்பி பதவிக்கான தேர்தல் வரும் அக். 4ம் தேதி நடைபெறுகிறது. அதிமுக எம்பிக்களாக இருந்த முகமது ஜான் மறைவு, வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகிய இருவர் ராஜினாமாவால், மாநிலங்களவையில் தமிழகத்திற்கான 3 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. மேற்கண்ட 3 இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்த வேண்டுமென திமுக கோரிக்கை விடுத்தது. அந்த கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம், ஒரு இடத்திற்கான தேர்தல் வரும் 13ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், திமுகவை சேர்ந்த எம்.எம்.அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்தார்.
சுயேட்சையாக போட்டியிட மூன்று வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அந்த மூன்று மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. எம்.எம்.அப்துல்லாவின் மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. வேட்புமனு தாக்கலுக்கான கால அவகாசம் நிறைவடைந்ததால் எம்.எம்.அப்துல்லா போட்டியின்றி மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவதாக இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இவர், 2025ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி வரை மாநிலங்களவை உறுப்பினராக செயல்படுவார். இந்நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதன்படி, வேட்புமனு தாக்கல் வரும் 15ம் தேதி தொடங்கும்.
வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் செப். 22ம் தேதியும், வேட்பு மனுக்கள் பரிசீலனை 23ம் தேதியும், வேட்பு மனுக்கள் திரும்ப பெறுதல் 27ம் தேதியும், வாக்குப்பதிவு வரும் அக். 4ம் தேதியும் (வாக்குப்பதிவு நேரம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை), அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தல் நடைமுறைகள் வரும் அக். 6ம் தேதியுடன் நிறைவுபெறுவதாக தேர்தல் ஆணையம் ெதரிவித்துள்ளது. இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட 2 இடங்களும் திமுக கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது.