அமரீந்தர் சிங் பதவியை ராஜினாமா செய்த நிலையில் பஞ்சாப் காங். முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டி?.. எம்எல்ஏக்களிடம் மேலிட பார்வையாளர்கள் கருத்து கேட்பு
9/19/2021 5:21:18 PM
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்த நிலையில், புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கின. புதிய முதல்வர் பதவிக்கு 4 பேர் போட்டியில் உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் அமரீந்தர் சிங்கிற்கும், நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் கடந்த சில ஆண்டுகளாக உட்கட்சி மோதல் தீவிரமாகி உள்ள நிலையில், கட்சியின் எம்எல்ஏக்கள் சிலர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
அதில் முதல்வராக அமரிந்தர் சிங் தொடர்ந்தால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும் என்று குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் முக்கிய திருப்பமாக ஆளுநர் மாளிகை சென்ற கேப்டன் அமரீந்தர் சிங், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சந்தித்து தனது முதல்வர் பதவிக்கான ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில், அமரீந்தர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமரீந்தர் சிங் மற்றும் அவரது அமைச்சரவையின் ராஜினாமாவை பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஏற்றுக்கொண்டதாக ராஜ் பவன் அறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது. இருப்பினும், புதிய முதல்வர் நியமனம் வரை அமரீந்தர் சிங்கே முதல்வராக தொடர ஆளுநர் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
தொடர்ந்து சண்டிகரில் நடந்த பஞ்சாப் காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பஞ்சாபை சேர்ந்த 78 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். இதில் அமரீந்தர் சிங் மற்றும் மற்றொரு எம்எல்ஏ மட்டுமே பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், பொதுச் செயலாளருமான ஹரிஷ் ராவத் முன்னிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், அமரீந்தர் சிங் தலைமையிலான ஆட்சிக்கு பாராட்டுகள் என்றும், அடுத்த முதல்வரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவிப்பார் என்று அந்த தீர்மானங்களில் கூறப்பட்டன.
அடுத்த முதல்வர் போட்டியில் முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் மாநில தலைவர் சுனில் ஜாகர் முன்னணியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. மாநில தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதரவாளரான இவருடன் சேர்த்து மேலும் இரண்டு துணை முதல்வர் பதவிகளை உருவாக்கவும் பேச்சு அடிபடுகிறது. அவர்களில், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் பிரதாப் சிங் பஜ்வா, காங்கிரஸ் மாநிலங்களவை எம்பி அம்பிகா சோனி, அமரீந்தர் சிங் அமைச்சரவையில் இருந்த சுக்ஜிந்தர் ரந்தாவா, சுக்பிந்தர் சிங் சர்க்காரியா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகையில், ‘அமரீந்தர் சிங்கே மீண்டும் முதல்வராக அறிவிக்க வேண்டும்’ எனக்கோரி 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதற்கான பஞ்சாப் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. முதல்வர் பதவிக்கு சுனில் ஜாகர், அம்பிகா சோனி, பிரதாப் சிங் பஜ்வா, சித்து ஆகியோர் பெயர்கள் பரிசீலினையில் உள்ளன.
கட்சியின் மேலிட பார்வையாளர்கள் ஹரீஷ் ராவத், அஜய் மக்கான் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தினர். அடுத்த சில நாட்களில் எம்எல்ஏக்களின் கருத்துக்கள் பெறப்பட்டு அவை, கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும். புதிய முதலமைச்சரின் பெயரை, கட்சி தலைமை அறிவிக்கும்’ என்று கூறினர்.
ராஜஸ்தானில் திடீர் பரபரப்பு
பஞ்சாபில் அரசியல் மாற்றங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதன் தாக்கம் ராஜஸ்தானில் காணப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற வருகிறது. முதல்வர் கெலாட்டின் ஓஎஸ்டி (சிறப்பு பணி அதிகாரி) லோகேஷ் சர்மா, தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘வேலியே பயிரை சாப்பிடுகிறது; அந்த பயிரை யார் காப்பாற்ற வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இவரது டுவிட் பதிவால், காங்கிரஸ் தலைமை அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து முதல்வர் அசோக் கெலாட், லோகேஷ் சர்மாவின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.