மின்கம்பத்தில் கார் மோதல்; ஓசூர் திமுக எம்எல்ஏவின் மகன் உள்பட 7 பேர் பலி: பெங்களூரில் அதிகாலை சோகம்
8/31/2021 5:08:45 PM
பெங்களூரு: பெங்களூரில் நேற்று நள்ளிரவில் மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஓசூர் திமுக எம்எல்ஏவின் மகன் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆடுகோடி போலீஸ் சரகத்திற்குட்பட்ட கோரமங்களா மெயின் ரோட்டில் உள்ள தனியார் மண்டபம் அருகே இன்று அதிகாலை 1.30 மணியளவில் கர்நாடக பதிவெண் கொண்ட சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் வந்தது. இந்த கார், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு சுவரில் ஏறி மின்கம்பத்தில் மோதியது. இதில் கார் முழுவதுமாக நொறுங்கியது.
இந்த காரில் பயணம் செய்த 7 பேர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் ஆடுகோடி போக்குவரத்து போலீசார் மற்றும் பெங்களூரு நகர போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி காந்தே கவுடா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி அருகேயுள்ள சென்ட் ஜான்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். இதில், விபத்தில் இறந்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திமுக எம்எல்ஏ ஒய்.பிரகாஷின் மகன் கருணாசாகர் (27), தமிழகத்தை சேர்ந்த பிந்து (28), கேரளாவை சேர்ந்த அக்ஷை கோயல் (23), இஷிதா (21), தனுஷ் (21), ஹூப்ளியை சேர்ந்த ரோஹித் (23), ஹரியானாவை சேர்ந்த உத்தவ் (23) என்பது தெரியவந்தது.
இவர்களில் கருணாசாகர்தான் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். தொழில்ரீதியாக நண்பர்களான இவர்கள் அனைவரும் பெங்களூருவில் கட்டுமான பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் வாங்குவதற்காக வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு பெங்களூரு வந்த இவர்கள், நேற்று நள்ளிரவு மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போதுதான், கோரமங்களா அருகே சென்றபோது கார் கருணாசாகரின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகி இருப்பது தெரியவந்துள்ளது. காரில் இருந்த அனைவரும் ஷீட் பெல்ட் அணியாததே உயிரிழப்புக்கு காரணம் என போலீசார் தெரிவித்தனர்.
இதுகுறித்து பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவிகாந்த்தேகவுடா கூறுகையில், `பெங்களூருவில் இருந்து தமிழகம் செல்லும்போது விபத்து நடந்துள்ளது. இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் இவர்கள் சாலையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்பது தெரியவில்லை. விபத்திற்கு அதிவேகம் மற்றும் கவனக்குறைவே காரணம். இதுதொடர்பான சி.சி.டி.வி கேமரா காட்சிகள் கிடைத்துள்ளது. இறந்தவர்களில் ஒருவர், ஓசூர் எம்.எல்.ஏவின் மகன் என்பது உறுதியாகியுள்ளது. மீதமுள்ளவர்கள் அவரது நண்பர்கள் என்று தெரியவந்துள்ளது என்றார். இந்த விபத்து சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த திமுக நிர்வாகிகள் பலர் பெங்களூர் விரைந்துள்ளனர்.
இவர்கள், ஓசூர் எம்எல்ஏவின் மகன் உடல் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனை முன்பு திரண்டுள்ளனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் இன்று மாலைக்குள் ஓசூர் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்படும் என கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தான், ஓசூர் எம்எல்ஏவின் மனைவி சிவம்மா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். தற்போது அவரின் மகன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஓசூர் எம்எல்ஏ மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.