பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம்: குன்னூரில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
8/30/2021 5:13:07 PM
குன்னூர்: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்தியா ஒருபோதும் தயங்காது என குன்னூரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில், வெளிநாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய எல்லைகளில் சவால்கள் இருந்தாலும், நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த ஒரு சமரசமும் இருக்காது என நாட்டு மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். 2 போர்களை இழந்த பிறகு, நமது அண்டை நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் மறைமுக போரை நாட தொடங்கியது. பயங்கரவாதம் என்பது பாகிஸ்தானின் ஒரு அங்கமாகி விட்டது.
பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள், நிதி மற்றும் பயிற்சி அளிப்பதன் மூலம் இந்தியாவை குறிவைக்க துவங்கியது. தற்போது, இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு எங்கள் பலம் தான் காரணம். கடந்த 2016ல் எல்லை தாண்டிய தாக்குதல்கள் இந்தியாவின் பிற்போக்கு மனநிலையை ஒரு செயலூக்க மனநிலையாக மாற்றியது. இது 2019ல் பால்கோட் வான்வழி தாக்குதலால் மேலும் வலுவடைந்தது. இந்தியா தனது சொந்த நிலத்தில் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவருவது மட்டுமல்லாமல் தேவைப்பட்டால் தங்கள் நிலத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தவும் தயங்காது என்ற நம்பிக்கை படிப்படியாக வலுவடைந்து வருகிறது. இதேபோல் கடந்தாண்டு வடக்கு துறையிலும், எல்லையில் இருந்த நிலையை மாற்ற ஒருதலைபட்ச முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அங்கேயும் சுறுசுறுப்புடன் எதிரியை எதிர்கொண்டோம்.
இந்தியா-சீனா எல்லை மோதலின்போது சீன படைகள் முன்னேற முயன்றபோது, இரவு 11 மணியளவில் ராணுவ தளபதியிடம் பேசினேன். நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. அந்த சூழ்நிலையிலும், இந்திய படைகள் விவேகமாக நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது. இதன்மூலம், எங்கள் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எந்த நேரத்திலும் எந்த சூழ்நிலையிலும் எந்த எதிரியையும் எதிர்கொள்ள நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்பதை பாதுகாப்பு படையினர் மீண்டும் நிரூபித்தனர். ஆப்கானிஸ்தானில் மாறிவரும் சூழல் இந்தியாவுக்கு ஒரு சவாலாக உள்ளது. இந்த சூழ்நிலை, நம் நாட்டின் யுக்தியை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளது. ஒருங்கிணைந்த போர் குழுக்களை உருவாக்குவதை பாதுகாப்பு அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.