கொரோனா மொத்த பாதிப்பில் 50 சதவீதம் பதிவு: கேரளாவில் 3வது அலை தொடங்கியதா?: ஒன்றிய நிபுணர்கள் குழு விரைந்தது
7/29/2021 5:10:18 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பில் 50 சதவீதம் கேரளாவில் பதிவாகி வருகிறது. திடீரென பாதிப்பு அதிகரித்து வருவதால், 3வது அலை உருவாகியுள்ளதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காக ஒன்றிய நிபுணர் குழு கேரளா விரைந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்த நிலையில், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் மூன்றாவது அலை ஏற்படும் என்று நிபுணர்கள் கூறி வருகின்றனர். பல மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு சரிந்துள்ள நிலையில், கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாகவே சனி, ஞாயிறு ஆகிய 2 நாளும் அனைத்து பகுதிகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த 2 நாட்களிலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி இந்த வாரமும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாளும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 43 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இதில் கேரளாவில் மட்டும் 20,000க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,96,902 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதில் 22,056 பேருக்கு ‘பாசிடிவ் ரிசல்ட்’ வந்துள்ளது. அதே நேற்று முன்தினம் 22,129 பேர் புதியதாக பாதிக்கப்பட்டனர்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 131 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த இறப்பு எண்ணிக்கை 16,457 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33.1 லட்சமாக அதிகரித்துள்ளது. நாட்டில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 43 ஆயிரம் என்ற நிலையில் அதில் 50 சதவீதம் அதாவது 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் கேரளாவில் பதிவாகின்றன. அதனால், கொரோனாவின் மூன்றாவது அலை கேரளாவில் இருந்து கிளம்புமா? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் மட்டும் அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் 3வது அலை தொடங்கியுள்ளதா என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 3வது அலை கடந்த இரு அலை பாதிப்பை விட அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கேரளாவில் மட்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது கவலையடைய வைத்துள்ளது.
அதனால், இது குறித்து ஆராய்வதற்காக ஒன்றிய சுகாதார அமைச்சக குழு அம்மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆறு பேர் கொண்ட ஒன்றிய அரசின் நிபுணர்கள் குழு, கேரள சுகாதார துறை அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி திட்டம், ‘செரோ’ பரிசோதனைகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிய உள்ளது. ஏற்கனவே, கேரளாவில் டெல்டா, ஜிகா, பறவைக் காய்ச்சல் உள்ளிட்ட வைரஸ்களுக்கு மத்தியில் நிபுணர்கள் குழு விரைந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கிடையே, இன்று காலை ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 43,509 பேருக்கு புதிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 640 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 38,465 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதுவரை கொரோனாவால் மொத்தம் 3.15 கோடி பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4 லட்சத்து 22 ஆயிரத்து 662 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3.7 கோடி பேர் குணமடைந்துள்ளனர். கிட்டதிட்ட 4 லட்சத்து 3,840 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் 45.7 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
'அச்சுறுத்தும் மூன்றாவது அலை'
கொரோனா மூன்றாவது அலை குறித்து ஐசிஎம்ஆர் அமைப்பின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் சமீரன் பண்டா கூறுகையில், ‘‘முதல் இரு அலைகளில் அதிகம் பாதிக்கப்படாத மாநிலங்கள், கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்றால், கொரோனாவின் மூன்றாம் அலையில் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்ளும். மூன்றாவது அலை என்பது இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தாக்காது. தொற்று பரவல் ஒவ்வொரு மாநிலத்தையும் ஒவ்வொரு வகையில் பாதித்து இருப்பதால், ஒவ்வொரு மாநிலத்துக்குத் தகுந்தவாறு தரவுகளை பகுப்பாய்வு செய்து கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.