செல்போன் ஒட்டுக்கேட்பு விவகாரம்: எதிர்கட்சி தலைவர்கள்அவசர ஆலோசனை
7/28/2021 5:01:52 PM
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவருதல் தொடர்பாக, ஆலோசனை கூட்டம் நடத்தின. கடந்த ஜூலை 19ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் புதிய வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுதல், பெகாசஸ் மென்பொருள் மூலம் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரை உளவு பார்த்ததாகக் கூறப்படும் விவகாரம் ஆகியவை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அக்கட்சியின் மக்களவை குழுத் தலைவர் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அக்கட்சி எம்பி கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்பி சுப்ரியா சுலே, சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த், தேசிய மாநாட்டு கட்சி எம்பி ஹஸ்னைன் மசூதி உள்ளிட்ட மக்களவை எதிர்க்கட்சி எம்பிக்கள் பங்கேற்ற கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவா் மக்களவையிலும், மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மாநிலங்களவையிலும் தனித்தனியாக ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, இன்று பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோருதல் தொடர்பாக, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்கள்.
முன்னதாக இரு சபைகளிலும் எழுப்ப வேண்டிய விசயங்கள் குறித்து எதிர்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இன்று நடந்த கூட்டத்தில், எதிர்கட்சி எம்பிக்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா (திமுக), சஞ்சய்ராவத் (சிவசேனா), காங்கிரஸ் எம்பிக்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாணிக்கம் தாகூர், கே.சுரேஷ், தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சூலே ஆகியோர் கலந்து கொண்டனர்.