டெல்லியில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்திப்பு
7/27/2021 5:05:44 PM
சென்னை: பிரதமர் மோடியை தொடர்ந்து அமித்ஷாவை இன்று காலை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் இடையே பதவி போட்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த நிலையில் செப்டம்பருக்குள் உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் அதிமுக தீவிரமாக இறங்கியுள்ளது. தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இரட்டை தலைமையின் கீழ் இயங்கி வருகிறது. கட்சியை ஒற்றை தலைமையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று போர்க்கொடி எழுந்துள்ளது.
ஜெயலலிதா இருந்த போது பொது செயலாளர் தான் கட்சியை வழிநடத்தி வந்தார். அதே போல மீண்டும் பொது செயலாளர் பதவியை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், பொது செயலாளர் பதவியை பிடிக்க ஓபிஎஸ், இபிஎஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இவர்கள் இரண்டு பேரும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர். அதே நேரத்தில் சட்டமன்றதேர்தலின் போது அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்த சசிகலா தற்போது மீண்டும் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இது ஓபிஎஸ், இபிஎஸ்க்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
மீண்டும் அவர் அதிமுகவுக்குள் வந்தால் அடிமை வாழ்க்கை தான் வாழ வேண்டும் என்று 2 பேரும் கருதுகின்றனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று முன்தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் டெல்லி புறப்பட்டு சென்றார். தனித்தனியே டெல்லி சென்ற அவர்கள் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் வரை நடைபெற்றது. மேலும் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாகவும் பிரதமரிடம் பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது, சட்டப்பேரவை தேர்தல் தோல்வி, சசிகலா விவகாரம், உட்கட்சி தேர்தல், தமிழக அரசியல் நிலவரம், உள்ளாட்சி தேர்தல், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 26 இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை விவகாரம். மேலும் பல முன்னாள் அமைச்சர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. சந்திப்புக்கு பின்னர், எடப்பாடி, ” தமிழகத்துக்கு கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும். கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் நேற்று சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால், அசாமில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் அமித்ஷாவை சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 2 பேரும் நேற்று டெல்லியிலேயே தங்கினர். இன்று அவர்கள் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருந்தனர். தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்றதால் இன்று காலை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பகல் 11.30 மணிக்கு சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கினார். அதைத் தொடர்ந்து ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது சட்டப்பேரவை தேர்தல் தோல்வி, சசிகலா விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.