நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு; விவசாயிகளின் குரல்களை அடக்கும் ஒன்றிய அரசு: டிராக்டர் ஓட்டிக்கொண்டு வந்த ராகுல் ஆவேசம்
7/26/2021 5:30:37 PM
புதுடெல்லி: விவசாயிகளின் குரல்களை ஒன்றிய அரசு அடக்குவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். ஒன்றிய அரசு இயற்றியுள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லையில் கடந்த 9 மாதமாக விவசாய அமைப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவர்களுடன் ஒன்றிய அரசு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை. மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. கடந்த 19ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக நாடாளுமன்றத்துக்கு வெளியே ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வேளாண்மை சட்டங்களுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் வந்தார். டிராக்டரை தானே ஓட்டி வந்தார். தனது வீட்டில் இருந்தே நாடாளுமன்றத்திற்கு டிராக்டரில் விவசாய அமைப்பை சேர்ந்தவர்களுடன் பேரணியாக சென்றார். பின்னர் நாடாளுமன்றத்திற்கு வெளியே ராகுல்காந்தி கூறுகையில், ‘போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொண்டேன். அவர்கள் (ஒன்றிய அரசு) விவசாயிகளின் குரல்களை அடக்குவதோடு, நாடாளுமன்றத்தில் விவாதமும் நடத்துவதில்லை. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இந்த சட்டம் குறிப்பிட்ட சில வியாபாரிகளுக்கு மட்டும் ஆதரவாக உள்ளது’ என்றார்.
இதற்கிடையே, நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியதும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மீராபாய் சன்னுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, வீரர்களுக்கு இரு அவைகளிலும் மரியாதை செய்யப்பட்டது. அதன்பின், எதிர்கட்சி எம்பிக்கள் ‘பெகாசஸ்’ ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக அமளியில் ஈடுபட்டதால் பகல் 12 மணி வரையிலும், அதன்பின் 2 மணியளவிலும் இருஅவைகளும் ஒத்திவைக்கப்பட்டு இடையிடையே நடத்தப்பட்டது. பாஜக நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.