உட்கட்சி பூசலால் பாஜ மேலிடம் அழுத்தம்; கர்நாடகா முதல்வர் எடியூரப்பா ராஜினாமா: பாராட்டு விழாவில் கண்ணீர் விட்டபடி அறிவித்தார்
7/26/2021 5:28:16 PM
பெங்களூரு: கர்நாடகா பாஜவில் உட்கட்சி பூசலால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில், முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பா ராஜினாமா செய்வதாக இன்று நடந்த பாராட்டு விழாவில் கண்ணீர் விட்டப்படி அறிவித்தார். பிற்பகலில் கவர்னரை சந்தித்து தனது அமைச்சரவை ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளார். பாஜ மேலிடம் கொடுத்த அழுத்தத்தால், எடியூரப்பா ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை தொடர்ந்து, கடந்த 2019 ஜூலை 26ம் தேதி பாஜ ஆட்சி அமைத்தது. எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இவருக்கு 78 வயதாகி விட்டதால், பாஜ கட்சியில் கொள்கை சித்தாந்தப்படி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று பாஜ எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் மேலிடத்திடம் வலியுறுத்தி வந்தனர். இதனால், எடியூரப்பாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
இதனால், பதவியேற்கும்போது எடியூரப்பா 2 ஆண்டுகளில் பதவி விலக வேண்டும் என்று கட்சி மேலிடம் நிபந்தனை விதித்ததாக கூறப்படுகிறது. இன்றுடன் எடியூரப்பா பதவியேற்று 2 ஆண்டுகள் முடிவடைகிறது. இதையொட்டி, கடந்த சில வாரங்களாகவே எடியூரப்பாவுக்கு எதிராக கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் முதல்வர் எடியூரப்பா பதவி விலகக்கோரி போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து, கட்சி மேலிடம் அழைப்பின்பேரில் கடந்த 16ம் தேதி டெல்லி சென்ற எடியூரப்பா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். அப்போது, மேலிடம் கொடுத்த அழுத்தத்தால் உடல்நிலை காரணம் காட்டி அவர் ராஜினாமா கடிதத்தை நட்டாவிடம் கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. சந்திப்புக்கு பின் பேட்டியளித்த எடியூரப்பா, ‘கட்சி மேலிடம் கேட்டுக்கொண்டால் பதவியை ராஜினாமா செய்வேன்’ என்று அறிவித்தார்.
ஆனால், எடியூரப்பா ராஜினாமா செய்தால் கர்நாடகாவில் பாஜ கடும் பின்னடைவை சந்திக்கும் என்று மடாதிபதிகள் போர்க்கொடி உயர்த்தி மேலிட தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். அவர்களை எடியூரப்பா சமாதானம் செய்தார்.
இந்நிலையில், 2 ஆண்டு ஆட்சி நிறைவு பெறுவதை முன்னிட்டு கட்சியின் சட்டப்பேரவை, மேலவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்றிரவு 7 மணிக்கு விருந்துக்கு முதல்வர் எடியூரப்பா ஏற்பாடு செய்திருந்தார். அதை தொடர்ந்து, இன்று கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தி, அதன்பின் பிற்பகல் 3 மணி அளவில் கவர்னரை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார் என்று கூறப்பட்டது. ஆனால், திடீரென விருந்தை முதல்வர் எடியூரப்பா ரத்து செய்துள்ளார். இந்த பரபரப்பான சூழ்நிலையில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நேற்று முன்தினம் டெல்லியில் பாஜ மேலிட தலைவர்களை சந்தித்து பேசினார்.
பெங்களூருவில் நேற்று முன்தினம் எடியூரப்பா அளித்த பேட்டியில், ‘‘கட்சி மேலிடம் வரும் 25ம் தேதி ஆட்சி தலைமை மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியிட உள்ளது. அதில் என்ன அம்சம் இருக்கும் என்று தெரியாது. கட்சி தலைமை என்ன முடிவெடுத்தாலும் அதை தலை வணங்கி ஏற்றுக் கொள்வேன்,’’ என்றார். இதன்மூலம், கர்நாடகாவில் முதல்வர் மாற்றம் இருக்கும் என்று கூறப்பட்டது. தற்போது, கோவாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் பாஜ தலைவர் ஜேபி நட்டா கோவாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கர்நாடகாவில் தலைமை மாற்ற பிரச்னையும் இல்லை. முதல்வர் எடியூரப்பாவின் பணிகள் சிறப்பாக அமைந்துள்ளன. இதனால், எடியூரப்பாவின் பதவி தப்பி விட்டதாக பரபரப்பு நிலவியது. இந்த சூழலில், கர்நாடக வடமாவட்டங்களில் வெள்ள பாதிப்பை நேற்று காலை பார்வையிட்ட பிறகு எடியூரப்பா அளித்த பேட்டியில், ‘‘பாஜ மேலிடம் இதுவரை என்னை பதவி விலகும்படி கூறவில்லை. ராஜினாமா கடிதத்தையும் கேட்கவும் இல்லை’’ என்றார்.
மாலையில் பேட்டி அளித்த எடியூரப்பா, ‘முதல்வர் பதவியில் நீடிப்பேனா அல்லது விலகுவேனா என்பது நாளைதான் (இன்று) தெரியும்’ என்றார். இதனால், அவர் பதவி விலகுவது உறுதியானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முதல்வர் எடியூரப்பா இன்று காலை 9 மணிக்கு கார்கில் வெற்றி விழாவில் கலந்து கொண்டார். தொடர்ந்து, பகல் 11 மணி முதல் 1 மணி வரை கட்சி ஆட்சி அமைத்ததின் 2வது ஆண்டு விழா பெங்களூரு விதான் சவுதாவில் நடந்தது. இதில் முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர்கள், அமைச்சர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, பகல் 1 மணிக்கு மேல் ஏற்கனவே திட்டமிட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் எடியூரப்பா ரத்து செய்தார். இதனால், ராஜினாமா அறிவிப்பை இந்த விழாவில் அறிவிப்பார் என கூறப்பட்டது. அதன்படி, விழாவில் பேசிய எடியூரப்பா தனது 2 ஆண்டுகால ஆட்சியில் செய்த நலத்திட்டங்கள், சாதனை மற்றும் சந்தித்த சோதனைகளை பட்டியலிட்டு பேசினார்.
ஒரு கட்டத்தில் கண்ணீர்விட்டப்படியே முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். விழா முடிந்ததும் கவர்னரை எடியூரப்பா, சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இதனால், பல நாட்களாக நீடித்து வந்த ராஜினாமா குழப்பம் முடிவுக்கு வந்தது. நாளை டெல்லியில் பாஜ உயர்நிலை குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் கர்நாடகாவின் புதிய முதல்வர் யார் என்று முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
அடுத்த முதல்வர் யார்?
எடியூரப்பா பதவி விலகுவது உறுதியாகி உள்ளதால், முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவியது. முதல்வர் பதவிக்கு 25க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் போட்டியிட்டனர். இதனால், பாஜ தலைமை குழப்பம் அடைந்துள்ளது. இதில், பாஜ தலைமை 8 பேர் கொண்ட பட்டியலை இறுதி செய்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மாநில துணை முதல்வர் அஷ்வத்நாராயண், முன்னாள் அமைச்சர் சி.டி.ரவி, முருகேஷ்நிராணி, அரவிந்த் பெல்லத், முன்னாள் முதல்வர் டி.வி.சதானந்தகவுடா, மாநில சபாநாயகர் விஷ்வேஷ்வர ஹெக்டே காகேரி மற்றும் பாஜ தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆகியோர் பெயர் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிரா அல்லது தெலங்கானா கவர்னர்?
எடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டால், கர்நாடகா பாஜவில் பிளவு ஏற்படாமல் இருக்கவும், அவரை சமாதானம் செய்யவும் மகாராஷ்டிரா அல்லது தெலங்கானா கவர்னராக அவரை நியமிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தெலங்கானா கவர்னராக உள்ள தமிழிசை கூடுதலாக புதுச்சேரி யூனியன் பிரதேச கவர்னராகவும் கவனித்து வருகிறார். இதனால், தமிழிசையை புதுச்சேரி கவர்னராக நியமித்து, எடியூரப்பாவை தெலங்கானா கவர்னராக நியமிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.