பார்வையாளர்களால் தொற்று பரவாமல் தடுக்க டிவி திரையில் குழந்தையை காண்பிக்கும் திட்டம் : ஜி.ஹெச்.களில் விரைவில் அறிமுகம்
11/27/2014 5:00:01 PM
நாமக்கல்: பார்வையாளர்களால் தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், டி.வி. திரையில் குழந்தையை காண்பிக்கும் திட்டம் முதற்கட்டமாக சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.சேலம், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் வார்டில் உயிரிழப்பு அதிகரித்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிசு மரணத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சீனிவாசன் சேலம், தர்மபுரி மருத்துவமனைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து, நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவை டாக்டர் சீனிவாசன் ஆய்வு செய்தார். பின்னர், அவர் அளித்த பேட்டி:
அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்கும் டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் சிறப்பு பயிற்சிக்கு பின்னரே பணிபுரிய அனுமதிக்கப்படுகின்றனர். குழந்தைகளை பராமரிக்க முறையான பயிற்சி இருந்தால் மட்டுமே கவனத்துடன் பாதுகாக்க முடியும். தரம் வாய்ந்த உபகரணங்கள் அரசு மருத்துவமனைகளில் இருக்கின்றன. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பல கர்ப்பிணிகள் கடைசி நேரத்தில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். இங்குள்ள பயிற்சி பெற்ற டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் தாய், சேய் இருவரும் காப்பாற்றப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றனர்.
குழந்தைகள் குறை பிரசவத்தில் பிறப்பது, எடைகுறைவு, மூச்சு திணறல் உள்ளிட்ட குறிப்பிட்ட தன்மைகளால் ஏற்படும் பாதிப்புகள் அனைத்திற்கும் அந்தந்த அரசு மருத்துவமனையிலேயே சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு இருதய நோய் பாதிப்பு இருந்தால் மட்டுமே மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும், தீவிர சிகிச்சை பிரிவில் பராமரிக்கப்படும் குழந்தைகளை பார்வையிட வரும் உறவினர்களால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவாமல் தடுப்பதற்காக பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் டி.வி. திரையில் குழந்தையை காட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சேலம், தர்மபுரி, நாமக்கல் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பின்னர், படிப்படியாக மற்ற மருத்துவமனைகளிலும் பின்பற்றப்படும். இவ்வாறு டாக்டர் சீனிவாசன் கூறினார்.