பூந்தமல்லி நீதிமன்றத்தில் பரபரப்பு: அரசு வக்கீல் அறையில் பதுங்கிய வாலிபரிடம் போலீஸ் விசாரணை: கொலை செய்ய வந்தாரா?
11/21/2014 3:44:30 PM
பூந்தமல்லி: பூந்தமல்லி நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அறையில் பதுங்கியிருந்த வாலிபரை போலீசார் பிடித்தனர். வக்கீலை கொலை செய்யவந்தாரா என்று விசாரிக்கின்றனர்.பூந்தமல்லி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் 2வது மாடியில் அரசு வழக்கறிஞர் அந்தமான் முருகன் அறை உள்ளது. நேற்று மாலை பணி முடிந்ததும் தனது அறையை பூட்டிவிட்டு சென்றார். இன்று காலை பணிக்கு வந்த முருகன், தனது அறை கதவை திறந்தார். ஆனால் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது. பலதடவை தட்டியும் கதவை திறக்கவில்லை. ஆனால் உள்ளே ஒரு ஆள் நடமாட்டம் இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன், நீதிமன்ற ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து கதவை தட்டியும் திறக்கவில்லை.
அறை முன் ஆட்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பூந்தமல்லி காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்தனர். கதவை திறந்து உள்ளே சென்றபோது வாலிபர் பதுங்கிருந்தார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்தபோது முரணாக பேசினார். இதனால் அவரை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர். அவர் பெயர் பாலாஜி (30) என்று தெரிந்து உள்ளது. மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார். அவர் உண்மையிலேயே மனநலம் பாதிக்கப்பட்டவர்தானா, நடிக்கிறாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கறிஞரை கொலை செய்யும் நோக்குடன் பதுங்கியிருந்தாரா என்று விசாரிக்கின்றனர்.நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் அறையில் பதுங்கியிருந்த வாலிபர் பிடிபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.