வழிப்பறி கொள்ளையர்கள் புழல் சிறையில் அடைப்பு
11/21/2014 3:08:57 PM
பெரம்பூர்; பெரம்பூர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரம்பூர் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் சித்தார்தன்(19). தனியார் நிறுவனத்தில் கேட்டரிங் படித்து வருகிறார். நேற்று இரவு இவர் தனது நண்பர்கள் சதீஷ்(18), மது(19) ஆகியோருடன் சேர்ந்து கண்ணாபிரான் கோயில் தெரு பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்றார். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த 2 பேர், திடீரென 3 பேரையும் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி ரூ. 500 பணம், 3 செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கியிருந்து தப்பினர்.
அச்சத்துடன் திரும்பிய 3 பேரும் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் கத்தியை காட்டி மிரட்டிய 2 ஆசாமிகள் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், பெரம்பூர் பகுதியை சேர்ந்த ரமேஷ்(28), மணிமாறன்(27) என்று தெரியவந்தது. இதனை அடுத்து 2 பேரின் மீது போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்த பணம், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர். 2 பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.