வயல்வெளியில் சடலம் வீச்சு: நிதி நிறுவன ஊழியர் சரமாரி குத்தி கொலை
11/21/2014 2:36:14 PM
சங்கராபுரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த நஞ்சப்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (33). இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் இரு சக்கர வாகன கடன் வசூலிப்பாளராக பணியாற்றி வருகிறார். நேற்று வேலை முடிந்து மேலப்பட்டு வழியாக மோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். இரவு 10 மணி அளவில் நஞ்சப்புத்தூர் அருகே அவரை மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியால் சரமாரியாக குத்தி உள்ளனர். உருட்டுக் கட்டையாலும் தாக்கி அங்குள்ள வயல்வெளியில் போட்டு விட்டு ஓடிவிட்டனர். இதில் ரத்தவெள்ளத்தில் சாய்ந்த செல்வகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதற்கிடையில், இன்று காலை வயலுக்கு சென்றவர்கள் செல்வகுமார் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
அருகிலேயே அவரது மோட்டார் சைக்கிளும் கிடந்தது. பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து அப்பகுதியில் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட செல்வகுமாருக்கு பாக்கியவதி என்ற மனைவியும், கிஷோர் (4) என்ற மகனும், கீர்த்தி (2) என்ற மகளும் உள்ளனர். சங்கராபுரத்தை சேர்ந்த அதிமுக வக்கீல் கடந்த மாதம் தியாகதுருகம் மெயின் ரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தற்போது நிதி நிறுவன ஊழியர் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து நடக்கும் கொலைகளால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.