உலக செஸ் சாம்பியன்ஷிப் 20 நகர்த்தல்களில் 9வது ஆட்டம் ‘டிரா’
11/21/2014 2:24:47 PM
சோச்சி: உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 9வது ஆட்டத்தில் ஆனந்தின் துல்லியமான நகர்த்தல்களால் 9வது ஆட்டம் 20 நகர்த்தல்களில் டிராவில் முடிவடைந்தது. நடப்பு சாம்பியன் கார்ல்சன்-ஆனந்த் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டித்தொடர் ரஷ்யாவில் சோச்சி நகரில் நடந்து வருகிறது. இதில் 9வது ஆட்டம் நேற்று நடந்தது. இதில் ஆனந்த் கருப்பு காய்களுடன் விளையாடினார். ஒரு புள்ளி முன்னிலை வகித்து வரும் கார்ல்சன் இந்தப்போட்டியில் வெள் ளைக் காய்களுடன் விளையாடியதால் எளிதில் வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்டது. அதற்கு ஏற்றார் போல் தனது ராஜாவுக்கு முன்பிருந்த வீரரை இரண்டு கட்டங்கள் முன்னுக்கு நகர்த்தி கார்ல்சன் ஆட்டத்தை துவக்கினார்.
ஐந்து முறை உலக சாம் பியன் பட்டத்தை வென்றவரான ஆனந்த், பெர்லின் தடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். அவரது ஆட்டத்தில் முன்னேற்றம் காணப்பட்டதால், கார்ல் சன் தனது ராஜாவை பாதுகாப்பான இடத்தில் வைக்க நேரிட்டது. 8வது நகர்த்தலில் ராணியை இடமாற்றி நுணுக்கமான ஆட்டத்தை கார்ல்சன் வெளிப்படுத்தினார். 16 நகர்த்தலில் ஆனந்தின் ராஜாவுக்கு ‘செக்’ வைக்க முயன்றார். ஆனால், ஆனந்தின் தடுப்பு வியூகத்தை தகர்க்க முடியாததால், திரும்ப திரும்ப ஒரே நகர்த்தலை செய்ய வேண் டிய நிலை கார்ல்சனுக்கு ஏற்பட்டது. இதையடுத்து 20வது நகர்த்தலில் ஆட் டத்தை ‘டிரா’ செய்ய கார்ல் சன் ஒப்புக் கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆனந்த் 15 நிமிடங்களில் அனைத்து காய் நகர்த்தல்களையும செய்து முடித்தார். ஆனால், 20 நகர்த்தல்களை மேற்கொள்ள கார்ல்சனுக்கு 50 நிமிடம் தேவைப்பட்டது.
‘‘குறைந்த நகர்த்தல்களில் ஆட்டம் டிராவில் முடிவடைந்தாலும், இரு வீரர்களும் இந்த முடிவால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஆனந்த் இனி வரும் 3 ஆட்டங்களில் இரண்டில் வெள்ளைக்காய்களுடன் விளை யாட உள்ளதால், அவர் தனது அதிர்ஷ்டத்தை சோதிக்க கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது,’’ என்று உலக தர வரிசையில் 7ம் இடம் வகிக்கும் கிராண்ட் மாஸ்டர் அனீஷ் கிரி கூறினார். 9ம் ஆட்ட முடிவில் கார்ல்சன் 5 புள்ளிகளும், ஆனந்த் 4 புள்ளிகளும் பெற்றுள்ளனர். 10ம் ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் ஆனந்த் வெள்ளைக்காய்களுடன் விளையாடுகிறார்.