சீன ஊடுருவல் இந்திய உறவை பாதிக்கும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை
11/21/2014 2:09:13 PM
லடாக்: எல்லையில் மீண்டும் மீண்டும் சீனா ஊடுருவல் நடவடிக்கையில் ஈடுபடுவது இந்தியாவுடனான நல்லுறவை பாதிக்கும் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காஷ்மீரில் நவம்பர் 25ம் தேதி தொடங்கி 5 கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. பாஜ தலைவர் அமித்ஷா தலைமையில் மிஷன் 45 பிளஸ் என்ற முழக்கத்துடன் மத்திய அமைச்சர்கள் தேர்தல் களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லே பகுதியில் நேற்று பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டம் பிரிவு 370 காரணமாக மேம்பாட்டு திட்டங்களை நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது. எனவே மக்கள் பாஜவுக்கு வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் 73வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த முடியும்.
சீனா சட்டவிரோதமாக அக்சாய் சின் பகுதியில் ஊடுருவியுள்ளது. சீன ராணுவத்தினர் அடிக்கடி இது போல ஊடுருவல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இந்தியாவுடனான நல்லுறவு பாதிக்கும். அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்க்க வேண்டும் என இந்தியா விரும்புகிறது. இரண்டு நாடுகளும் எல்லை பிரச்னைகளை தீர்த்துக் கொண்டால் நமது உறவில் புதிய உச்சங்களை எட்ட முடியும். அப்பகுதியில் முன்பு ஊடுருவல் செய்த பாகிஸ்தான் தற்போது அதனை ‘பரிசாக’ சீனாவுக்கு கொடுத்து விட்டு சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் முந்தைய தேசிய மாநாட்டு கட்சி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க தவறிவிட்டது. அதே போல் மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் இதனை பனி பாலைவனமாக்கியதை தவிர வேறு ஒன்றும் செய்யவில்லை. காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகளின் காரணமாகவே சீனாவுடனான எல்லை விவகாரம் சுதந்திரம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் தீர்க்கப்படாமல் உள்ளது என்றார்.