போலீஸ் கமிஷனர் ஆபீஸ் முற்றுகை
11/20/2014 3:08:57 PM
சென்னை: ஷெனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர் இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ‘சேத்துப்பட்டை சேர்ந்த கீதா என்பவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். ஏலச்சீட்டுக்காக அவரிடம் நான் ரூ.50 ஆயிரம் பணத்தை கட்டினேன். சீட்டு முடிந்த பிறகு அவரிடம் பணத்தை கேட்டதற்கு அவர் தரவில்லை. தொடர்ந்து கேட்டதால், என்னை அவர் மிரட்டினார்' என்றார். 150க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கீதா மீது புகார் செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கீதாவின் மகன்கள் 2 பேர் மத்திய சென்னை அதிமுக எம்பி விஜயகுமாரிடம் வேலை செய்வதால், போலீசார் கீதா மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று முற்றுகையிட்ட வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டினர்.