இலங்கை மாநாடு: வேல்முருகன் கோரிக்கை
11/19/2014 3:04:27 PM
சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கை: இலங்கை தலைநகர் கொழும்புவில் வரும் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை சார்க் மற்றும் ஆசியா நாடுகளின் ராணுவ தளபதிகள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவின் ராணுவ தளபதியும் பங்கேற்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை சிறைபிடிப்பதும் அவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பிடித்து வைப்பதுமான அட்டூழியத்தில் இலங்கை அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு மாநாடு உள்பட எந்த ஒரு நிகழ்ச்சியிலும் இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கணித்து தமது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். எனவே, 5 அப்பாவித் தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்த கொடுஞ்செயலைக் கண்டித்தும் அவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தும் விதமாகவும் அந்நாட்டிலே நடைபெற உள்ள பாதுகாப்பு மாநாடு உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் புறக்கணித்து தெற்காசியாவின் வல்லரசு இந்தியாதான் என்பதை இலங்கை அரசுக்கு புரியும் வகையில் தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.