காந்தி ஜெயந்தி அன்று மதுவிலக்கு அமல்படுத்த எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்
9/26/2014 2:43:42 PM
ஆவடி: திருவள்ளூர் மாவட்ட எஸ்டிபிஐ சார்பாக அரசியல் பயிலரங்கம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் ஷேக் முகமது அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் அகமது பட்ஷா வரவேற்றார். மாநில தலைவர் தெஹ்லான் பார்கவி சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக்கோரி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, திருவள்ளூர் மாவட்டம் சார்பாக ஆவடி நகராட்சி அலுவலகம் அருகில் போராட்டம் நடத்துவது, இலங்கை தமிழர் பிரச்னை மற்றும் மீனவர் பிரச்னையில் இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படும் பாஜ அரசை கண்டிப்பது, மண்ணூர்பேட்டையில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் புது கட்டிடம் கட்டவேண்டும். அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்கவேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றினர்.இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் புகாரி, ஜாகீர்உசேன், அசன்அப்துல்வாரிப், பாடி ரசூல், ஷேக், தபீர், அகமது உள்பட பலர் கலந்து கொண்டனர். அம்பத்தூர் தொகுதி தலைவர் முகமது ரசூல் நன்றி கூறினார்.