சென்னை: சன் டிவி ஊழியர்கள் கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், ஜெயலலிதா-மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி சந்திப்புக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.வைகோ(மதிமுக): தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவரது இல்லத்தில் தொலைபேசி தொடர்புகள் அமைக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டுக்கு ஆளான நிலையில், அதற்கான முழு ஒத்துழைப்பை அவர் தந்து வருகிறார். அதற்கான பணத்தையும் செலுத்த அவர் தயாராக இருக்கிறார். மற்றொருபுறம் விசாரணையும் நடக்கிறது. அது ஒரு பக்கம் இருக்க, அவரது உதவியாளர்கள் மற்றும் சன் தொலைக்காட்சி ஊழியர்களை கைது செய்து துன்புறுத்துவது கவலை அளிக்கிறது. யாரையும் துன்புறுத்தவோ, அச்சுறுத்தவோ, சித்ரவதை செய்யவோ சட்டத்தில் இடமில்லை. கைது செய்யப்பட்டவர்களை அச்சுறுத்தி வாக்குமூலம் பெறுவது கண்டனத்துக்குரியது.
ஜனநாயகத்தின் கோட்பாட்டுக்கு எதிரானது. சட்டப்படி என்ன விசாரணை நடைபெற வேண்டுமோ அதை எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு தயாநிதி மாறனுக்கு எதிராக காவல்துறை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது. பத்திரிகை, தொலைக்காட்சியில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு அற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது மனித உரிமைக்கு எதிரானதாகும். வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): மத்தியில் மோடி தலைமையில் பாஜ அரசு பொறுப்பேற்ற பின்பு தமிழ் மக்களின் நலனை புறக்கணிப்பது மட்டுமல்லாமல் தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இப்போது ஊடகங்களை தாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். உலகம் முழுவதும் வாழும் கோடானுகோடி தமிழர்களின் மனதில் நிலைத்து நிற்கும் சன் டிவி மாபெரும் ஊடகம்.
இந்நிறுவனத்தின் ஊழியர்கள் மீதான கைது நடவடிக்கையை தமிழக வாழ்வுரிமை கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஊடகங்களை தாக்கும் பாஜ அரசின் இத்தகைய போக்கு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.என்.ஆர்.தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி): முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மீது வழக்கத்துக்கு அதிகமாக தொலைபேசி இணைப்புகள் இருந்ததாகவும், அதை தவறான முறையில் சன் டிவிக்கு பயன்படுத்தியதாகவும் வழக்கு பதியப்பட்டு, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் திடீரென சன் டிவி நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை சிபிஐ கைது செய்து அவர்களை மிரட்டி தயாநிதி மாறனுக்கு எதிராக வாக்குமூலம் வாங்குவதற்காக துன்புறுத்துவது நியாயமற்ற செயல். சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடந்து வந்த விசாரணை, ஜெயலலிதா- அருண் ஜெட்லி சந்திப்புக்கு பிறகு சிபிஐயை ஏவி விட்டு திமுக மீது பழிவாங்கும் நோக்கத்தோடு பாஜ அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அரசியல் உள்நோக்கத்தோடு அப்பாவி மீடியா ஊழியர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பது நியாயமற்ற செயல். இது பாஜ அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே.ஆர்.சி.பால்கனகராஜ் (உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் மற்றும் தமிழ் மாநில கட்சித் தலைவர்): ஒரு வழக்கில் எப்ஐஆரில் இல்லாத நபர்களை கைது செய்திருப்பதை ஏற்க முடியாது. இதில் வேறு உள்நோக்கம் இருக்கலாம். கைது செய்யப்பட்டவர்களை சாட்சிகளாக மாற்ற முயற்சி நடந்துள்ளது. இதில் முக்கியமாக ஊடகத்தில் பணியாற்றுபவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது வருத்தத்தை அளிக்கிறது, ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஊடகத்தில் பணியாற்றுபவர்களுக்கு விடப்பட்ட சவாலாகும். ஊழல் வழக்கு விசாரணையில் கைது நடவடிக்கை இருக்கும் என்பது பொதுவான நடைமுறைதான். அதற்காக சம்பந்தமே இல்லாதவர்கள் கைது செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது. அந்த பணியாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
வக்கீல் கண்ணதாசன்: அரசியலமைப்பின் 4வது தூணாக விளங்கும் ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே இந்த கைது நடவடிக்கையை கருத வேண்டும். இந்த வழக்கில் அரசியல் உள்நோக்கம் உள்ளது. யாரையோ சமாதானப்படுத்துவதற்காக, திருப்திப்படுத்துவதற்காக இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மத்தியில் ஆட்சி நடத்திவரும் பாஜ எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் பல செயல்களை செய்து வருகிறது. இப்போது 10 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் தேவையில்லாமல் சன் தொலைக்காட்சி ஊழியர்களை கைது செய்து ஊடகத்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தை சிபிஐ கவனத்தில் கொண்டு கைது செய்யப்பட்ட சன் தொலைக்காட்சி பணியாளர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.