ஐதராபாத்: ஐதராபாத்தில் பல்லை கழக மாணவர் ரோஹித் வெமூலா மர்ம மரணத்தில் குற்றம் சாட்டப்பட்ட துணை வேந்தர் அப்பாராவ் மீண்டும் பணிக்கு திரும்பியதால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அவரது அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடினர்.ஐதராபாத் மத்திய பல்கலை கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தலித் ஆய்வு மாணவர் ரோஹித் வெமூலா மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய அமைச்சர்கள் பண்டாரு, ஸ்மிருதி இரானி ஆகியோர் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ரோஹித் உள்ளிட்ட 5 மாணவர்களை சஸ்பெண்ட் செய்து துணை வேந்தர் அப்பாராவ் ராவ் உத்தரவிட்டார். இந்த சூழலில் ரோஹித் வெமூலா ஜனவரி 17ம் தேதி மர்மமான முறையில் நண்பனின் அறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் பண்டாரு, அப்பாராவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர்கள் விலக கோரியும், பண்டாருவை பணிநீக்கம் செய்ய வலியுறுத்தியும் மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையில் அப்பாராவ் விடுப்பில் சென்றார். இடைக்கால துணைவேந்தராக நியமிக்கப்பட்ட விபின் ஸ்ரீவத்சவாவுக்கும் எதிரப்பு வலுக்கவே அவரும் நீண்ட விடுப்பில் சென்றார். இதையடுத்து பெரியசாமி துணை வேந்தர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். தற்போது போராட்டம் வலு குறைந்ததாக கருதப்பட்ட சூழலில் துணை வேந்தர் அப்பாராவ் மீண்டும் பணிக்கு திரும்பினார்.
இதை அறிந்த மாணவர்கள் அவரது அலுவலகத்திற்கு வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ரோஹித் வெமூலா விவகாரத்தில் அப்பாராவ் விதிமுறைகளை மீறி செயல்பாட்டார் என மாணவர்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அவரது அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடினர். இதில் கம்ப்யூட்டர்,பிரிண்டர்,மேசை உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன. இதற்கிடையில் கன்னையா குமார் நாளை ஐதராபாத் பல்கலை வரவிருக்கிறார். இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.