ஆலந்தூர்: ஆலந்தூர் 165வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் ஆதம்பாக்கத்தில் நேற்று மாலை நடந்தது. வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் தலைமை வகித்தார். ஆலந்தூர் தெற்கு பகுதி செயலாளர் என்.சந்திரன், வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், மாவட்ட பிரதிநிதிகள் ஜி.ரமேஷ், கோ.பிரபாகரன், எஸ்.ரத்தினம், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். அவைத் தலைவர் நாகராஜசோழன் வரவேற்றார்.கூட்டத்தில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் பேசியது: இந்த கூட்டத்தில், வீராங்கனைகள் அதிகமாக உள்ளார்கள். அவர்கள், ஜெயலலிதாவை வீட்டுக்கு அனுப்ப தயாராகி விட்டார்கள். இப்போதுள்ள கவுன்சிலர்கள், குப்பை வாருவதில்லை, கால்வாய் பணிகளை செய்வதில்லை.
ஆனால் இடங்களை மடக்கி வீடுகள் கட்டுவதில் மும்முரமாக உள்ளனர். சைதை துரைசாமி, குப்பைகளை சேகரிக்க புளு நிறத்தில் 841 குப்பை சேகரிக்கும் மையத்தை திறந்தார். அதில் யாரும் குப்பை கொட்டவில்லை. ஆனால் அந்த இடங்கள், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாகவும், சில இடங்களில் அவற்றை கழற்றி இரும்பு கடையிலும் போட்டு விட்டார்கள். அம்மா உணவகத்துக்காக வாங்கப்பட்ட சப்பாத்தி இயந்திரத்தால் பல கோடி வீணானது. தற்போது கைகளால் மட்டுமே சப்பாத்தி உருட்டி சுடுகின்றனர். கொசுக்களை ஒழிக்க வீடுகளில் நொச்சி செடி வளருங்கள் என்றார். வீடே இல்லாதவர்களிடம் நொச்சி செடி வளருங்கள் என்றால் எப்படி வளர்ப்பார்கள்? வீட்டுக்கு வீடு பிளீச்சிங் பவுடர் தருவதாக சொன்னார்கள்.
எத்தனை வீடுகளுக்கு கொடுத்தார்கள் என்று அவர்களால் சொல்ல முடியுமா? தெரு விளக்குகள் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.கூட்டத்தில், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் தாயகம் கவி, எம்.எஸ்.கே.இப்ராகிம் மற்றும் நிர்வாகிகள் பிரபாகர ராஜா, கோல்ட் பிரகாஷ், கிரிகுஜாலம்மாள், கவுன்சிலர் முத்து, நடராஜன், ஜெயராம் மார்த்தாண்டன், சேது செந்தில், குணசேகரன், நடராஜன், சுப்புராஜ் உள்பட பலர் கலந்து ெகாண்டனர். சுதாகரன் நன்றி கூறினார்.