காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் பேச்சுவார்த்தை மு.க.ஸ்டாலின் பேட்டி
சென்னை: காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் ஒதுக்கப்படும் தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கும் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.கிழக்கு மாவட்ட திமுகவில் புதிதாக நியமிக்கப்பட்ட இளைஞர் அணி, மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகள் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர் பாபு தலைமையில் இன்று காலை அண்ணா அறிவாலயம் வந்தனர். அவர்கள் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்காக தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கேட்டுக் கொண்டார். பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில் விவரம்:
திமுக தேர்தல் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி அதை இறுதி செய்து விரைவில் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்.கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த தகவல் எப்போது வெளியிடப்படும்? கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை முடியும் தருவாயில் உள்ளது. திமுக தரப்பில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் தொகுதி பங்கீடு குழு அமைத்தவுடன் தொகுதிகள் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கும். அதன் முடிவை கருணாநிதி அறிவிப்பார். தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகிறதே?முதல்வர் ஜெயலலிதா கையில் தான் சட்டம் ஒழுங்கு உள்ளது. அவரிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுக்குமா?திமுக ஆட்சிக்கு வந்த உடன் ஆணவ கொலைகள் நடப்பது தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.