திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் செப்டம்பர் மாதம் 11ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் புகழ்பெற்ற கந்தசுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2012 வருடம் ஜூன் மாதம் குடமுழுக்கு பணிகள் மேற்கொள்ள பலாலயம் நடத்தினர். இதன்பிறகு குடமுழுக்கு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.மூலவர் விமானம், கோயில் கருவறை, பிரகார மண்டபம், உற்சவர் மண்டபம், 16 கால் மண்டபம், கோயில் வெளிப்புற பகுதி உள்ளிட்டவை புனரமைப்பு செய்யப்பட்டு, அழகிய வண்ணங்களில் பெயின்ட் அடிக்கப்பட்டுள்ளது.
16 கால் மண்டபத்தில் அழகிய ஓவியங்கள் வரையப்பட்டு, கண்கொள்ளா காட்சியாக விளங்குகிறது. இந்த பணிகள் தற்போது இறுதிகட்டத்தை அடைந்துவிட்டது. இதனால் குடமுழுக்கு விழா நடத்துவதற்கு அனுமதி கேட்டு, இந்து அறநிலையத்துறைக்கு திருப்போரூர் கோயில் நிர்வாகம் கடிதம் அனுப்பியது. இந்து அறநிலையத்துறையின் அனுமதிப்படி வருகின்ற செப்டம்பர் மாதம் 11ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.கும்பாபிஷேகத்துக்கு தேதி குறிக்கப்பட்டுவிட்டதால் யாகசாலை அமைத்தல், கோபுரத்துக்கு சாரம் கட்டுதல், அழைப்பிதழ் அச்சடித்தல் உள்ளிட்ட பணிகள் இன்று முதல் தொடங்கியது. கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.