வேலூர் அருகே பரபரப்பு திறந்தவெளி போர்வெல்லில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு
வேலூர்:வேலூர் அல்லாபுரம் கே.கே.நகர் 3வது தெருவை சேர்ந்தவர் அப்துல் ஜபார். இவருடைய மகன் அப்துல் காதர் (4). நேற்று மாலை அப்பகுதியில் சிறுவன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு சாலையோரத்தில் இருந்த மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 3 அடி ஆழத்தில் சிக்கி கொண்ட சிறுவன் பீதியில் கூச்சலிட்டான். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். ஆழ்துளை கிணற்றில் சிறுவன் சிக்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் உள்ள பகுதியை வெட்டியும், இரும்பு கம்பிகளால் நெம்பியும் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு சிறுவனை வெளியே எடுத்தனர். ஆழ்துளை கிணற்றுக்குள் விழாமல் 3 அடி ஆழத்திலேயே சிறுவன் சிக்கி கொண்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரணி அருகே விவசாய நிலத்தில் திறந்து கிடந்த போர் வெல்லில் சிறுமி தவறி விழுந்து பலியானாள். அப்போது மூடப்படாமல் இருக்கும் போர்வெல்களை உடனடியாக மூட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. ஆனால் இன்னும் பல பகுதிகளில் திறந்த நிலையிலேயே போர்வெல்கள் இருக்கின்றன என்று பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.