சென்னை: தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான ஊழல் புகார் வந்தால், அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பு தமிழக விஜிலென்ஸ் கமிஷனில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனுமதி பெறவேண்டும் என்று 1988ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.இந்த அரசாணையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புகழேந்தி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், ‘அரசு ஊழியர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு புகார் வந்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்யவேண்டும். இதில், உயர் அதிகாரிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அரசிடம் முன் அனுமதிப்பெறவேண்டும் என்று கூறுவது அரசு ஊழியர்களிடையே பாரபட்சம் காட்டுவது போல் உள்ளது. இந்த அரசாணை, அரசு ஊழியர்கள் மத்தியில் பாகுபாட்டை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும். உயர் அதிகாரிகளுக்கு எதிராக வரும் ஊழல் புகார்கள் மீது போலீசார் நேரடியாக வழக்குப்பதிவு செய்யலாம் என்று உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதில், ‘ ஊழல் புகார் மீது வழக்குப்பதிவு செய்வதில் அரசு ஊழியர்களிடையே பாரபட்சம் உள்ளதாக மனுதாரர் கூறியுள்ளார். எனவே, தமிழக அரசு ஊழியர்கள், பதவி வேறுபாடு இல்லாமல், யார் மீதும் ஊழல் புகார் வந்தால், அந்த புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அரசிடம் முன் அனுமதிப் பெறவேண்டும் என்று கடந்த பிப்ரவரி 2-ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று கூறி அந்த அரசாணையை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் மற்றொரு வழக்கை வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்தார். அதில், ‘அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது வரும் ஊழல் புகார் மீது வழக்குப்பதிவு செய்த தமிழக அரசிடம் முன் அனுமதி பெறவேண்டும் என்று கடந்த பிப்ரவரி 2ம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணை சட்ட விரோதமானது. இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த அரசாணைக்கு தடை விதிக்க முடியாது. அதேநேரம், இந்த மனுவுக்கு தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளனர்.