திருவனந்தபுரம்: சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் நடிகர் கலாபவன் மணி விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து அவரது நண்பர்கள் மற்றும் உதவியாளர்களின் வங்கி கணக்குகளை பரிசோதிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.நடிகர் கலாபவன் மணி மரணமடைந்து 2 வாரங்களுக்கு மேல் ஆன பிறகும் அவரது மரணத்தில் ஏற்பட்ட மர்மம் இன்னும் விலகவில்லை. முதலில் வெளியான பிரேத பரிசோதனை அறிக்கையில் கல்லீரல் பாதிப்பு தான் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது.
ஆனால் பின்னர் வெளியான உடற்கூறு பரிசோதனையில் அவரது உடலில் கலந்திருந்த குளோரோபைரிபோஸ் என்ற பூச்சிக்கொல்லி மருந்து தான் மரணத்திற்கு காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கலாபவன் மணி விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கலாபவன் மணியின் உதவியாளர்களான முருகன், விபின், அருண் மற்றும் பினு ஆகியோரை போலீசார் கடந்த 2 நாட்களுக்கு மேலாக ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். இதுவரை விசாரணையில் குறிப்பிடத்தக்க வகையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதையடுத்து உள்ளூர் போலீசுடன் குற்றப்பிரிவு போலீசாரும் சேர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றப்பிரிவு எஸ்.பி. உண்ணிராஜா தலைமையிலான போலீசார் நேற்று முதல் கலாபவன் மணியின் பண்ணை வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கலாபவன் மணியின் சொத்துக்களை அபகரிப்பதற்காக அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் போலீசுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உதவியாளர்கள் மற்றும் நண்பர்களின் வங்கி கணக்குகளை பரிசோதிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.
கலாபவன் மணி சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் வெளிநாடுகள் உட்பட ஏராளமான இடங்களில் அடிக்கடி கலைநிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். கலைநிகழ்ச்சிகள் மூலம் கிடைக்கும் லட்சக்கணக்கான பணத்தை அவரது உதவியாளர்கள் மற்றும் நண்பர்கள் முறைகேடு செய்ததாக கலாபவன் மணியின் தம்பி ராமகிருஷ்ணன் ஏற்கனவே போலீசில் புகார் தெரிவித்திருந்தார்.
மேலும் கலாபவன் மணி சமீபத்தில் பினாமி பெயரில் சொத்துக்கள் ஏதாவது வாங்கினாரா, இது தொடர்பாக நண்பர்கள் அல்லது உதவியாளர்களுடன் ஏதாவது தகராறு ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே கலாபவன் மணியின் உடல் உறுப்பு பரிசோதனையை மீண்டும் நடத்தவும் போலீசார் தீர்மானித்துள்ளனர்.