பீப் பாடல் சர்ச்சையிலிருந்து மீள அனிருத்துக்கு கைகொடுக்கும் அஜீத்
பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு, அனிருத் சர்ச்சையில் சிக்கினர். பீப் பாடலுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அனிருத் கூறினார். சிம்புவும், ‘அனிருத்துக்கு தொடர்பில்லை’ என்றார். பின்னர் இருவரும் போலீசில் தனித்தனியாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதற்கிடையில் அனிருத்துக்கு புதிய படங்கள் ஒப்பந்தம் ஆவதில் சிக்கல் ஏற்பட்டது. ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த 3 படங்களிலிருந்து நீக்கப்பட்டார். புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்யாமல் பல இயக்குனர்கள் தவிர்த்தனர். இதனால் அதிர்ச்சியில் ஆழ்ந்தார். அனிருத்துக்கு கைகொடுக்கும் விதமாக அஜீத் தனது புதிய படத்துக்கு இசை அமைக்க வாய்ப்பு தந்தார். இப்படத்தை ‘வீரம்’ பட இயக்குனர் சிவா இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் நடக்கிறது. படப்பிடிப்புக்கான ஆரம்ப கட்ட பணிகளை இயக்குனர் தொடங்கி இருப்பதுடன், ஸ்கிரிப்ட்டும் இறுதி செய்துள்ளார். தற்போது அனிருத்துடன் கொடைக்கானலில் முகாமிட்டிருக்கும் இயக்குனர் பாடல்கள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் படம் திரைக்கு வரும் என்று தெரிகிறது.