சென்னை: லஸ் சர்ச் சாலையின் இடையே 15 அடி அகலத்தில் நடைபாதை அமைக்கும் பணிக்கு பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மாநகராட்சி அந்த திட்டத்தை கைவிட்டது. லஸ் சிக்னல் அருகே வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை அழைத்து வரும் பெற்றோர் தங்களது கார்களை சாலையோரம் நிறுத்தாமல் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தமிழக அரசு, போக்குவரத்து போலீஸ், காவல் துறை அதிகாரிகள் என பலருக்கு புகார் மனு அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து இப்பகுதி மக்களும் சாலை மறியல், மனித சங்கிலி உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இது மட்டுமின்றி, பிஎஸ் சிவசாமி சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகபெரிய பள்ளம் விழுந்தது. இவற்றை சரிசெய்யும் பணியில் குடிநீர் வாரிய பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவ்வழியாக செல்லும் வாகனங்கள் வீரப்பெருமாள் கோவில் தெரு, அப்பர் சாமி கோயில் தெரு உள்ளிட்ட உட்புற சாலைகள் வழியாக செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.தண்ணீர்துறை மார்க்கெட் அருகே அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது. இந்த நிலையில், ஒரு வழி பாதையாக உள்ள லஸ் சர்ச் சாலையின் நடுவே 15 அடி அகலத்தில் நடைபாதை பூங்கா அமைக்க முடிவு செய்து அதற்கான பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
வித்யா மந்திர் பள்ளிக்காக லஸ் சர்ச் சாலையிலிருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையை ஒரு வழிப்பாதையாக மாற்றிவிட்டனர். இதை இரு வழிப்பாதையாக மாற்ற போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், நடைபாதை பூங்கா அமைத்தால் இரு வழிப்பாதையாக மாற்றுவதில் சிக்கல் ஏற்படும்.மேலும் 80 அடி சாலையில் ஏற்கனவே, சாலையின் இரு புறங்களிலும் தலா 12 அடியில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சாலையின் நடுவே நடைபாதை பூங்கா அமைப்பதால் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் மயிலாப்பூர், மேலும், போக்குவரத்து நெரிசலால் முடங்கும் அபாயம் உள்ளது. வித்யா மந்திர் பள்ளிக்கு ஆதரவாகவே திடீரென நடைபாதை பூங்கா அமைக்கும் பணி தொடர்ந்திருப்பதாக அரசியல் கட்சிகள் புகார் கூறியுள்ளன.
அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் நாடைபாதை அமைக்கும் பணியை கைவிடும் படி மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதவிர திராவிடர் விடுதலை கழகத்தினர் மற்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பலவேறு கட்சியினர் சென்னை மாநகராட்சி ஆணையரை சந்தித்து நடைபாதை திட்டத்தை கைவிடக் கோரி மனு அளித்திருந்தனர். அதைதொடர்ந்து சாலையின் இடையே நடைபாதை பூங்கா அமைத்தால் மக்களை திரட்டி மிக பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று மாநகராட்சிக்கு எச்சரிக்கைவித்திருந்தனர்.இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் லஸ் சர்ச் சாலையில் நடைபாதை பூங்கா அமைக்க போடப்பட்டிருந்த கான்கிரீட் கற்களை அகற்றி வருகின்றனர்.