வெளிநாட்டில் பறிமுதல் செய்து வங்கி கணக்கில் பிரதமர் மோடி செலுத்திய பணத்தை தரவேண்டும் : அடம் பிடித்த முதியவரால் பரபரப்பு
குலசேகரம்: பாராளுமன்றத்தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடி, வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கோடிக்கணக்கான கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.அத்துடன் அரசின் சலுகைகள் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று பாஜ அரசு அறிவித்தது. இதனால் வங்கி கணக்கு இல்லாத ஏராளமானோர் புதிய வங்கி கணக்குகளை தொடங்கினர். இதன்படி திருவட்டார் புத்தன்கடை பகுதியைச் சேர்ந்த ராகவன் (64) என்பவர் திருவட்டாரில் உள்ள ஒரு வங்கியில் கணக்கு தொடங்கினார்.
இந்த நிலையில், சில நாளுக்கு முன் வங்கிக்கு சென்ற ராகவன், தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். அதற்கு வங்கி ஊழியர்கள், ‘’ கணக்கு தொடங்கும் போது போட்ட 500 மட்டுமே உள்ளது. இதனால் பணம் எடுக்க இயலாது’’ என்று கூறியுள்ளனர். ஆனால் முதியவர் விடுவதாக இல்லை. வெளிநாடு வங்கியிலிருந்து மீட்கப்பட்ட கருப்பு பணம் அனைவரின் வங்கி கணக்குகளிலும் சேர்க்கப்படும் என பிரதமர் மோடி கூறினார். அதற்காகத்தான் வங்கியில் கணக்கு தொடங்கினேன். பிரதமர் பணம் போட்டு இருப்பார். எனவே, அந்த பணம் எனக்கு வேண்டும் என்றார். இதனால் வங்கி ஊழியர்கள் செய்வதறியாது திகைத்தனர்.
வங்கி மேலாளர் அந்த முதியவரை அழைத்து சமாதானப்படுத்தினார். எனினும் சமாதானமாகாத முதியவர் அருகிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்தவர்களிடம் மத்திய அரசு எனது கணக்கில் செலுத்திய பணத்தை பெற்று தர உதவ வேண்டும் என்றார். ‘’அப்படி எதுவும் பணம் போடவில்லை. போடும் போது சொல்கிறோம்’ என்று கூறி முதியவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.