ஆவடி: சென்னை அம்பத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு பகுதியில் ஒரு தனியார் கம்பெனி உள்ளது. பைபர் இழையினால் வீட்டுக் கதவுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் உரிமையாளர்களாக முகப்பேரை சேர்ந்த சக்திகுமார், அம்பத்தூர் பிருத்விவாக்கத்தை சேர்ந்த விஜயபாரத் ஆகியோர் உள்ளனர். இக்கம்பெனியில் நேற்று மாலை வேலை முடிந்ததும் ஊழியர்களை அனுப்பிவிட்டு, 2 உரிமையாளர்களும் கம்பெனியை பூட்டிவிட்டு வீட்டுக்கு திரும்பினர். இந்நிலையில், அக்கம்பெனியில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் கரும்புகை வெளியாகியது. பின்னர் மளமளவென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதைப் பார்த்ததும் அருகில் இருந்த கம்பெனிகளின் காவலாளிகள் தீயணைப்பு துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதைத் தொடர்ந்து ஆவடி, அம்பத்தூர், கோயம்பேடு, ஜெஜெ.நகர் ஆகிய பகுதிகளில் இருந்து 4 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தன. பின்னர் தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்தில் கம்பெனியில் இருந்த மூலப்பொருட்கள், உற்பத்திக்கு பயன்படும் அச்சுகள் மற்றும் தயார்நிலையில் உள்ள கதவுகள் என பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. இப்புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாசவேலை காரணமா அல்லது மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டதா என விசாரித்து வருகின்றனர்.