ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க லோக்சபாவில் காங்கிரஸ் எதிர்ப்பு
புதுடெல்லி, -ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் சுப்ரீம் கோர்ட்டால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகன்,பேரறிவாளன் உள்பட 6 பேருடன் ஏற்கனவே ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் நளினியையும் சிறையிலிருந்து விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் ஒப்புதலை கோரி கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரம் இன்று லோக்சபாவில் எதிரொலித்தது. இன்று காலை அவை கூடியதும் இந்த பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பிக்கள் வலியுறுத்தினர். தமிழக அரசின் முடிவை ஏற்றுக் கொள்ளக்கூடாது என கோஷம் எழுப்பினர். கேள்வி நேரம் முடிந்தவுடன் இது குறித்து பேசலாம் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறினார். காங்கிரஸ் எம்பிக்கள் ெதாடர்ந்து கோஷம் எழுப்பவே இந்த பிரச்னை குறித்து சிறிது நேரம் பேச காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சபாநாயகர் அனுமதி வழங்கினார். கார்கே பேசும் போது, தமிழக அரசின் முடிவு துரதிர்ஷ்டவசமானது. இத்தகைய குற்றவாளிகளை விடுதலை செய்ய அனுமதித்தால் மற்ற மாநிலங்களும் இது போன்ற கோரிக்கையை வைக்கும். இதனால் நாட்டின் ஒருமை பாதிக்கப்படும். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என்றார்.