நைஜீரியாவில் 100 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
யவுண்டே: ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், அரசுக்கு எதிராக போகோ ஹரம் என்ற தீவிரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். பொது இடங்களில் வெடிகுண்டு வைப்பது, கிராமங்களில் புகுந்து அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வது, வீடுகளை தீ வைத்து கொளுத்துவது, பொருட்களை கொள்ளையடித்து செல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். நைஜீரியாவில் மட்டுமின்றி அண்டை நாடுகளான கேமரூன், நிசார், சாத் ஆகியவற்றிலும் தங்கள் அமைப்பை விரிவுபடுத்தி வருகின்றனர். தீவிரவாதிகளால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். இவர்களை ஒடுக்க நைஜீரியா, கேமரூன் நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
நைஜீரியாவின் கும்ஷே நகரில் போகோ ஹரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கேமரூன் நாட்டு எல்லை அருகே உள்ள இப்பகுதியில் இருநாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் நேற்று அதிரடி தாக்குதல் நடத்தினர். இதில் 100 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பிடித்து வைத்திருந்த இளம்பெண்கள் உள்ளிட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போகோ ஹரம் தீவிரவாதிகள் கடந்த வருடம் பள்ளி மாணவிகள் 300 பேரை கடத்தி சென்றனர். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து சில மாணவிகள் தப்பி வந்த நிலையில், மற்றவர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. தீவிரவாதிகளை ஒடுக்க நைஜீரியா அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.