ஒப்பந்த தொழிலாளர் பிரச்னை: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண என்எல்சிக்கு தொமுச வலியுறுத்தல்
சென்னை: தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை பொதுச் செயலாளர் சண்முகம் இன்று வெளியிட்ட அறிக்கை:நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 13,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, இதர சலுகைகள் குறித்த பேச்சுவார்த்தை நிர்வாகத்துடன் மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததால் இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.தற்சமயம் 2000க்கும் மேற்பட்ட காலி யிடங்கள் இருந்தும் நிர்வாகம் 250 பேர்களை மட்டும் நிரந்தரப்படுத்துவோம் என்று பிடிவாதம் பிடித்து வருகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரப் பணிகளை செய்து வரும்போது அவர்களுக்கு ஊதிய உயர்வு, இதர சலுகைகள் அளிக்க மறுத்து வருகிறது. தமிழகத்தில் மின்சார வாரியம், போக்குவரத்து மற்றும் தமிழ்நாடு காகித ஆலை போன்ற நிறுவனங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு அளிப்பது போல் தொழிற்சங்கங்களுடன் பேசி என்எல்சி நிர்வாகம் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.