பாஜ தொண்டர்கள் மீது தடியடி மேற்கு வங்கத்தில் பரபரப்பு
10/21/2016 2:54:57 PM
கொல்கத்தா, -மத்திய அமைச்சர் மீது திரிணாமுல் தொண்டர்கள் கல்வீசி தாக்கியதை கண்டித்து பாஜ கட்சியினர் நடத்திய போராட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.மேற்கு வங்கத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, பாஜ நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை மீட்பதற்காக மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோ தலைமையில் பாஜ நிர்வாகிகள் ஊர்வலமாக காவல் நிலையம் நோக்கி சென்றனர். அப்போது அமைச்சர் மீது திரிணாமுல் தொண்டர்கள் கற்களை வீசி தாக்கினர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பாபுல் சுப்ரியோ தனது டுவிட்டரில், ‘இந்த சம்பவத்திற்கு பின்னால் முதல்வர் மம்தாவின் திரிணாமுல் அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர் மலாய் கட்டாக்கின் சதி உள்ளது’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து மத்திய அமைச்சர் பாபுல் சுப்ரியோவை தாக்கியவர்களை கைது செய்ய வலியுறுத்தி பாஜ எம்பி ரூபா கங்குலி, தேசிய செயலாளர் ராகுல் சின்கா ஆகியோர் தலைமையில் அக்கட்சியினர் நேற்று கொல்கத்தாவில் உள்ள முதல்வர் மம்தா வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் ஹசரா பகுதியில் தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் வன்முறை வெடித்தது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவத்தில் 13 போலீசார் மற்றும் 4 தொண்டர்கள் காயமடைந்தனர். போலீசார் மீது கல்வீசி தாக்கியதால்தான் தடியடி நடத்த நேர்ந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் இதை பாஜ எம்பி ரூபா கங்குலி மறுத்துள்ளார். ‘‘பாஜவினர் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தினர். திரிணாமுல் ஆட்சியில் ஜனநாயகம் இல்லை என்பதைத்தான் போலீசாரின் நடவடிக்கை காட்டுகிறது’’ என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.