ரேஷன் கார்டுகளில் அகிலேஷ் புகைப்படத்திற்கு எதிர்ப்பு - தேர்தல் ஆணையத்தில் முறையிட பாஜ முடிவு
10/21/2016 2:54:32 PM
லக்னோ, -உத்தரபிரதேசத்தில் ரேஷன் கார்டுகளில் முதல்வர் அகிலேஷ் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் முறையிட பாஜ முடிவு செய்துள்ளது.உத்தரபிரதேசத்தில் தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் இடையே மோதல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆளும் சமாஜ்வாடிக்கு எதிராக பாஜ, காங்கிரஸ், மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் சரமாரியான குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றன.தற்போது ரேஷன் கார்டுகளில் முதல்வர் அகிலேஷ் படம் அச்சடிக்கப்பட்டுள்ளது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப் போவதாக பாஜ கூறியுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா கூறுகையில், ‘‘ரேஷன் கார்டுகளில் அகிலேஷ் படம் அச்சடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். இது மிகவும் மலிவான விளம்பர நடவடிக்கையாகும். ரேஷன் கார்டுகளில் உள்ள அகிலேஷ் படத்தை உடனடியாக அகற்ற சமாஜ்வாடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் செய்வோம். தேர்தல் வருவதையொட்டி ஆளும் சமாஜ்வாடி அரசு மிகவும் மலிவான முறையில் இது போன்ற சுய விளம்பரங்களை செய்து கொள்கிறது’’ என்றார்.இதே போல், காங்கிரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதன் மாநில துணை தலைவர் சத்யதேவ் திரிபாதி கூறுகையில், ‘‘ரேஷன் கார்டுகளில் முதல்வரின் படத்தை அச்சடித்தது தவறு. தேர்தல் விளம்பரத்திற்காக அகிலேஷ் இதை செய்துள்ளார்’’ என்றார்.உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் அகிலேஷ் அரசு 3.15 கோடி ரேஷன் கார்டுகளை அச்சடித்தது. அதில் அகிலேஷ் படம் பொறிக்கப்பட்டுள்ளது தற்போது அங்கு அரசியல் சர்ச்சையை கிளப்பியுள்ளது.