ரூ 2300 கோடி கருப்பு பணம் உ.பி. நிறுவனத்தில் கண்டுபிடிப்பு
10/21/2016 2:51:10 PM
கான்பூர், - உத்தரபிரதேசத்தில் ஒரு நிறுவனத்தில் கலால் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.2,300 கோடி மதிப்பிலான கருப்புப்பணம் தொடர்புடைய ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரும்புத் தளவாடங்களை தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த பிரபல நிறுவனம், உற்பத்தி பொருட்களை விற்பதில் பல முறைகேடுகள் செய்து, வரி ஏய்ப்பு செய்வதாக மத்திய கலால் வரி புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அங்கு திடீர் ெரய்டு நடத்த கலால் துறை இயக்குநரகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணையில், இந்நிறுவனம், தனது உண்மையான விற்பனை ஆவணங்களை மறைத்து வைப்பதற்காக ரகசியமாக ஒரு அலுவலகத்தை கான்பூரில் நடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் குறைந்த அளவிலேயே விற்பனை நடப்பதாகக் காட்டி வரி ஏய்ப்பு செய்வதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த அலுவலகத்தில் மத்திய கலால் வரி புலனாய்வு துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர். அப்போது ரூ.2,300 கோடி அளவுக்கு கருப்பு பணம் தொடர்புடைய ஆவணங்கள் அங்கு இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கைது செய்யப்பட்டார்.