இளம்பெண்களுடன் இருப்பதை காட்டி வருண்காந்தியை பிளாக்மெயில் செய்து ராணுவ ரகசியங்கள் வெளியீடு? - அமெரிக்க வக்கீல் ‘திடுக்’ புகார்
10/21/2016 2:50:22 PM
புதுடெல்லி, - இந்திய ராணுவத்தின் ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தம் தொடர்பான ரகசியங்களை பாஜ எம்.பி. வருண் காந்தி கசிய விட்டார் என்றும், அவரை சர்வதேச ஆயுத புரோக்கர் பிளாக்மெயில் செய்து இதை பெற்றிருக்கிறார் என்றும் ‘திடுக்’ குற்றச்சாட்டை நியூயார்க்கை சேர்ந்த வக்கீல் ஒருவர் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார்.
நியூயார்க்கைச் சேர்ந்த வக்கீல் எட்மோன்ஸ் ஆலன் என்பவர், கடந்த மாதம் 16ம் தேதியன்று இந்திய பிரதமர் அலுவலகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ‘‘பாதுகாப்பு ஆலோசனைக்கான நாடாளுமன்றக் குழு உறுப்பினரான பாஜ எம்.பி. வருண் காந்தியை, சர்வதேச ஆயுத புரோக்கர் அபிஷேக் வர்மா மற்றும் சில ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பிளாக்மெயில் செய்து இந்தியாவின் ஆயுதத் கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பான பல ரகசியத் தகவல்களைப் பெற்றிருக்கிறார்கள். இளம்பெண்கள் மற்றும் வெளிநாட்டு பாதுகாவலர்களுடன் வருண்காந்தி இருப்பது போன்ற புகைப்படங்களை காட்டியே அவரை மிரட்டியிருக்கிறார்கள்’’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கடிதத்தை எழுதிய எட்மோன்ஸ் ஆலனும், அபிஷேக் வர்மாவும் முன்பு தொழில் பங்குதாரர்களாக இருந்தனர். 2012ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். 2006ம் ஆண்டு கடற்படைத் தலைமையகத்தில் இருந்த ரகசிய ஆவணங்கள் திருடப்பட்ட வழக்கில் அபிஷேக் வர்மா மீது ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ஸ்வராஜ் அபியான் கட்சியின் தலைவர்கள் பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ் ஆகியோர், ராணுவ ரகசியங்கள் ‘லீக்’ ஆகி விட்டதாகவும், பிரதமர் இதில் என்ன நடவடிக்கை எடுக்கப் ேபாகிறார் என்றும் கேள்வி எழுப்பினர். அவர்கள் வருண்காந்தி பெயரை குறிப்பிடாவிட்டாலும் வக்கீல் எட்மோன்ஸ் எழுதிய கடிதத்தின் நகலை நிருபர்களிடம் அளித்தனர்.மேலும் அவர்கள் கூறுகையில், ‘‘அனைத்து விவரங்களும் தெரிந்த பிறகும் இதில் தொடர்புடைய பிரான்ஸ் நாட்டின் தேல்ஸ் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்வதை மத்திய அரசு நிறுத்தவில்லை. ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பலை அந்த நிறுவனம்தான் இப்போது இந்தியாவுக்கு வழங்கி வருகிறது’’ என்றும் குற்றம்சாட்டினர்.