ரீட்டா பகுகுணா துரோகி காங்கிரஸ் கடும் தாக்கு
10/21/2016 2:49:45 PM
புதுடெல்லி, - பாஜவுக்கு தாவியதன் மூலம் ரீட்டா பகுகுணா, காங்கிரசுக்கு துரோகம் இழைத்திருக்கிறார் என்று உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர் கூறியுள்ளார். உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. அங்கு மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ரீட்டா பகுகுணா கட்சியின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என கூறப்பட்டது. ஆனால், ஷீலா தீட்சித்தை முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இதில் அதிருப்தியடைந்த ரீட்டா பகுகுணா நேற்று டெல்லியில் உள்ள பாஜ தலைமையகத்துக்கு சென்று, அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் பாஜவில் சேர்ந்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘பாக். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பிரதமரை நாடே பாராட்டுகிறது. ஆனால், ராகுல்காந்தி அதை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தார்’’ என குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:
ரீட்டா பகுகுணா மீது காங்கிரஸ் தலைமை முழு நம்பிக்கை வைத்திருந்தது. ஆனால், அவர் துரோகியாகி விட்டார். அவர் தனது குடும்பத்தினரைப் போலவே கட்சி தாவி விட்டார். இதற்கு முன்பு உத்தரகண்ட் மாநிலத்தில் ரீட்டா பகுகுணாவின் சகோதரர் விஜய் பகுகுணா, காங்கிரஸில் இருந்து விலகி பாஜவில் இணைந்தார். அதனால், அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதேபோல், ரீட்டா பகுகுணா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
உத்தரப் பிரதேசத் தேர்தலில் வெற்றி பெறுவது சந்தேகம் எனக் கருதி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த துரோகிகளை பாஜ தனது கட்சியில் சேர்த்து வருகிறது. மேலும், இம்மாநிலத்தில் பாஜவுக்கு 71 எம்.பி.க்கள் உள்ளபோதிலும், தங்கள் கட்சி தலைவர்கள் மீது அக்கட்சி நம்பிக்கையை இழந்து, பிற கட்சிகளில் இருப்பவர்களை இழுத்து வருகிறது.
இவ்வாறு ராஜ் பாப்பர் கூறினார்.