தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் கடலை பருப்பு, அரிசி விலை கிடு கிடு உயர்வுc - எண்ணெய் விலை சரிவு
10/21/2016 2:49:18 PM
சென்னை, - தீபாவளி பண்டிகை நெருங்கும் வேளையில் கடலை பருப்பு விலை கிலோவுக்கு ரூ.40 வரை அதிகரித்துள்ளது. அரிசி விலையும் உயர தொடங்கியுள்ளது. அதே சமயம், சமையல் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன.தீபாவளி பண்டிகைக்கு மக்கள் வீடுகளிலேயே முறுக்கு, முந்திரி கொத்து, அதிரசம், குலோப் ஜாமூன் உள்ளிட்ட பலகாரங்கள் செய்வது உண்டு. இதனால், தீபாவளி நெருங்கும் சமயத்தில் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டும் பருப்பு வகைகள் விலை உயர்ந்துள்ளன. ஆனால், எண்ணெய் விலை குறைந்துள்ளது.
இந்தோனேசியா, மலேசியா, தென் அமெரிக்கா, ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதியாகிறது. சமீபத்தில், இறக்குமதி வரியை மத்திய அரசு 5 சதவீதம் குறைத்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்றம், இறக்கம் நிலை காணப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் வடமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சூரிய காந்தி விளைச்சல் அதிகமாக உள்ளது. இது போன்ற காரணங்களால் எண்ணெய் விலை குறைய தொடங்கியுள்ளது.
பாமாயில்(1 லிட்டர்) ரூ.65ல் இருந்து ரூ.60 ஆக குறைந்துள்ளது. சன் பிளவர் ஆயில் ரூ.86ல் இருந்து ரூ.83, சன்பிளவர் ஆயில்(2ம் ரகம்) ரூ.82 முதல் ரூ.78, தேங்காய் எண்ணெய் ரூ.150ல் இருந்து ரூ.130, அக்மார்க் நல்லெண்ணெய் ரூ.190ல் இருந்து ரூ.180, ெபாள்ளாச்சி, காங்கேயம், ஈரோடு அக்மார்க் நல்லெண்ணெய் ரூ.170ல் இருந்து ரூ.150 ஆக விலை குறைந்துள்ளது. லிட்டருக்கு மேலும் ரூ.2 முதல் ரூ.5 வரை குறைய வாய்ப்புள்ளது.
தான்சானியா, கென்யா, மாளவியா, பர்மா போன்ற நாடுகளுடன் பருப்பு இறக்குமதிக்கு மத்திய அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதனால் இறக்குமதி அதிகரித்துள்ளது. பதுக்கல் பருப்பும் வெளியே வர தொடங்கியுள்ளது. இதனால், துவரம் பருப்பு ரூ.140லிருந்து ரூ.125, துவரம் பருப்பு(2ம் ரகம்) ரூ.125லிருந்து ரூ.105, தான்சானியா பருப்பு ரூ.100 லிருந்து ரூ.80, உளுந்தம் பருப்பு ரூ.130லிருந்து ரூ.120, உளுந்தம் பருப்பு(2ம் ரகம்) ரூ.120லிருந்து ரூ.100, பாசிப்பருப்பு ரூ.115லிருந்து ரூ.75, பாசிப்பருப்பு(2ம் ரகம்) ரூ.100லிருந்து ரூ.60ஆகவும் விலை குறைந்துள்ளது.
அதே போல், சேலம் வெல்லம் ரூ.55லிருந்து ரூ.50, வேலூர் வெல்லம் ரூ.65லிருந்து ரூ.60, அச்சுவெல்லம் ரூ.75லிருந்து ரூ.70, சர்க்கரை ரூ.43லிருந்து ரூ.40 ஆக விலை குறைந்துள்ளது.
விலை அதிகரிப்பு:
மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி, அரியானா ேபான்ற மாநிலங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடலை பருப்பு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலை பருப்பு விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கடலைப்பருப்பு கிலோ ரூ.110ல் இருந்து ரூ.140, கடலை பருப்பு(2ம் ரகம்) ரூ.90லிருந்து ரூ.130 ஆக விலை அதிகரித்துள்ளது. பரமக்குடி, விளாத்திக்குளம், ராமநாதபுரம் போன்ற இடங்களில் விளைச்சல் பாதிப்பால் வத்தல் விலை அதிகரித்துள்ளது. இதனால் குண்டு மிளகாய் ரூ.220லிருந்து ரூ.260, குண்டு மிளகாய்(2ம் ரகம்) ரூ.190லிருந்து ரூ.230, நீட்டு மிளகாய் ரூ.130லிருந்து ரூ.160 ஆகவும் விலை அதிகரித்துள்ளது என்று தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.பி.சொரூபன் ெதரிவித்துள்ளார்.
அரிசி விலை எகிறியது:
காவிரி பிரச்னை காரணமாக கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளது. இதனால் அரிசி விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஸ்டீம் அரிசி ரூ.50 லிருந்து ரூ.52, ஸ்டீம் 2ம் ரக அரிசி ரூ.48லிருந்து ரூ.50, இட்லி அரிசி ரூ.28லிருந்து ரூ.32, ரூபாலி பொன்னி ரூ.28லிருந்து ரூ.30, ரூபாலி பொன்னி(2ம் ரகம்) ரூ.28லிருந்து ரூ.30, அதிசய பொன்னி ரூ.36லிருந்து ரூ.38, அதிசய பொன்னி(2ம் ரகம்) ரூ.34லிருந்து ரூ.36, பாபட்லா பொன்னி(பழையது) ரூ.46லிருந்து ரூ.48, பாபட்லா பொன்னி(புதுசு) ரூ.42லிருந்து ரூ.44, வெள்ளை பொன்னி ரூ.54லிருந்து ரூ.56, வெள்ளை பொன்னி(2ம் ரகம்) ரூ.50லிருந்து ரூ.52 ஆகவும் விலை அதிகரித்துள்ளது. டிசம்பர், ஜனவரியில் அரிசி வரத்து அதிகமானால் மட்டுமே விலை குறைய வாய்ப்புள்ளது. பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் அரிசி கிலோ ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளது.