நவாஸ் ராஜினாமா: இம்ரான் கோரிக்கை
10/21/2016 2:48:40 PM
இஸ்லாமாபாத், -பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக பனாமா பேப்பர் சமீபத்தில் செய்தி வெளியிட்டது. இதையடுத்து, நவாஸ் மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்று கொண்டு, பிரதமர் நவாஸ் ஷெரிப், அவரது மகள், மகன்கள், மருமகன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்நிலையில், நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் கூறுகையில், ‘‘மன்னரை போன்று நவாஸ் நடந்து கொள்கிறார். சட்டத்துக்கு முன்பு அனைவரும் சமம் என்பதை அவர் உணர வேண்டும். இந்த வழக்கில் உடனடியாக நீதி கிடைக்கும் என நம்புகிறேன். இதன்மூலம் மறைந்து கிடக்கும் உண்மைகள் நாட்டு மக்களுக்கு தெரியவரும். அதிகாரத்தை பயன்படுத்தி நவாஸும், அவரது குடும்பத்தினரும் ஊழல் செய்து, சொத்துக்களை குவித்துள்ளனர். நவாஸ் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்றார்.