சென்னை அருகே ஓட்டேரியில் மேம்பால பணிக்காக கட்டிடங்கள் இடிப்பு
10/21/2016 2:46:16 PM
கூடுவாஞ்சேரி, -சென்னை வண்டலூர் அடுத்த ஓட்டேரியில் ரூ.30 கோடியில் ரயில்வே மேம்பால பணி கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக ரயில்வே கேட்டும் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன. இதனால் ஓட்டேரி, வண்டலூர், கிளாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எளிதில் சென்று வந்த மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவசர ஆபத்துக்குகூட ஆம்புலன்ஸ் செல்ல வழியில்லை. இதனால் ஊரப்பாக்கத்துக்கும், வண்டலூருக்கும் சுற்றிக்கொண்டு வரவேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜேந்திரதாஸ், உதவி பொறியாளர் ஜெயக்குமார், செங்கல்பட்டு தாசில்தார் பரிமளவதனி, துணை தாசில்தார் பாலாஜி, வண்டலூர் குறுவட்ட வருவாய் ஆய்வாளர் செந்தமிழ்செல்வி, விஏஓ சீனிவாசன் ஆகியோர் மேம்பாலம் கட்டும் பணிக்கு இடையூறாக இருந்த குடியிருப்பு கட்டிடங்களை வண்டலூர் டிஎஸ்பி முகிலன் தலைமையில் நெடுஞ்சாலைத்துறையினர் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் நேற்று இடித்துதள்ளினர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது;
ஏற்கனவே மேம்பால பணிக்காக இப்பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 40 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் ஊரப்பாக்கம் மேம்பாலம் அருகில் இடம் ஒதுக்கி தரப்பட்டது. தற்போது மேம்பாலப்பணிக்கு இடையூறாக இருந்த மீதமுள்ள கட்டிடங்களை இடித்துள்ளோம்.2 ஆண்டில் கட்டி முடிக்கப்பட வேண்டிய மேம்பாலப்பணி 6 ஆண்டுகளாக தாமதமாக நடைபெற்று வருவதற்கு காரணம் நாங்கள் அல்ல. இன்னும் 4 மாதத்தில் மேம்பால பணி முடிந்துவிடும்.
இவ்வாறு கூறினர்.