தூத்துக்குடி கோர்ட் வளாகத்தில் வக்கீலுக்கு கத்திக்குத்து - 8 ேபர் மீது வழக்கு
10/21/2016 2:45:47 PM
தூத்துக்குடி, -தூத்துக்குடியில் கோர்ட் வளாகத்தில் வக்கீலை கத்தியால் குத்திய சம்பவத்தில் பார் கவுன்சில் உறுப்பினர் உள்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையொட்டி அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி வக்கீல் சங்கத்திற்கு நாளை (22ம்தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்றிரவு வக்கீல்கள் சிலர் கோர்ட் வளாகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு வெளியில் வந்து கொண்டிருந்தனர். கோர்ட் நுழைவாயில் அருகே அவர்கள் வரும் போது எதிரே வேறு சில வக்கீல்களும் வந்துள்ளனர்.
சங்க நிர்வாகிகள் தேர்தல் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் தூத்துக்குடி அசோக் நகரைச் சேர்ந்த வக்கீல் ரகுராமன் (43) என்பவருக்கு கத்திக்குத்து விழுந்தது. காயமடைந்த அவர், தூத்துக்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக தென்பாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி 8பேர் மீது வழக்குபதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தையொட்டி கோர்ட் வளாகத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். வக்கீல் ரகுராமன் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனையிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை வக்கீல் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோர்ட் வளாகத்திலேயே வக்கீலுக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.