சென்னை புறநகர் பகுதிகளில் கண்ணை மறைக்கும் புழுதி படர்ந்த சாலைகள் - செயல்படாத போக்குவரத்து சிக்னல்கள்
10/21/2016 2:43:58 PM
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு புறநகர் பகுதிகளில் நன்றாக உள்ள தார்சாலைகள் அனைத்தும் செப்பனிடும் பணி நடைபெற்றதாக கணக்கு காட்டுவதற்காக தோண்டப்படுகின்றன. இதனால் அந்த சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, அப்பகுதி முழுவதும் கண்ணை மறைக்கும் அளவுக்கு புழுதி படர்ந்து காணப்படுகிறது.மேலும், பல்வேறு புறநகர் பகுதிகளில் அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல்கள் அனைத்தும் செயல்படாமல் காட்சி பொருளாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் ஏராளமான வாகன விபத்துகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை புறநகர் பகுதிகளான துரைப்பாக்கம், சோழிங்கநல்லூர், சிட்லப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், ஈஞ்சம்பாக்கம், புழல், சோழவரம், செங்குன்றம், பூந்தமல்லி, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்த தார்சாலைகள், கடந்த ஆண்டு இறுதியில் பெய்த கனமழையின்போது பலத்த சேதமடைந்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் உள்ள சாலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தரமான தார்சாலையாக செப்பனிடப்பட்டது.
தற்போது அந்த தார்சாலைகள் அனைத்தும் அந்தந்த வார்டுகளில் சாலைகள் செப்பனிடப்பட்டதாக கணக்கு காட்டி பணம் பெறுவதற்காக, அந்தந்த பகுதி ஆளுங்கட்சி கவுன்சிலர்களின் ஆதரவுடன் நன்றாக உள்ள தார்சாலைகள் அனைத்தும் பெயர்த்து எடுக்கப்படுகின்றன. அல்லது, அந்த தார்சாலைகள் அனைத்து கீறப்பட்டு, அப்பகுதி முழுவதும் பல்லாங்குழி சாலைகளாக மாறிவிட்டன. இதனால் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து அடிபட்டு செல்கின்றனர்.
உதாரணமாக, துரைப்பாக்கம் காவல் நிலையம் அருகே உள்ள சி.எல்.மேத்தா சாலையில் இதுவரை தார்சாலை அமைக்கப்படவில்லை. அங்கு கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு மண்சாலையாக காட்சியளிக்கிறது.இந்த சாலை வழியாக கார், லாரி, வேன், தனியார் கல்லூரி பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது, அங்கு கடும் மண் புழுதி எழுகிறது.
மேலும், பூந்தமல்லியில் இருந்து குமணன்சாவடி, மாங்காடு, பட்டு வழியாக குன்றத்தூர் சாலை நீண்ட காலமாக செப்பனிடப்படாமல், தற்போது பல்லாங்குழி சாலையாக மாறிவிட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, ‘பூந்தமல்லி, குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகள் சரிவர செப்பனிடப்படவில்லை. மேலும், இங்கு சாலை விரிவாக்கப் பணிகளும் முடங்கி உள்ளது. இவ்வழியாக நாள்தோறும் செல்லும்போது, சேதமான சாலையில் இருந்து எழும் மண் புழுதியால் பலருக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதல் ஏற்படுகின்றன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நகராட்சி, ஆளுங்கட்சி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் இப்பிரச்னையை கண்டுகொள்வதில்லை. அவர்கள் அதிக வருவாயை தரும் தனியார் கல்லூரி நிர்வாகத்தினருக்கு சேவை செய்வதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர்’ என்று அனைவரும் ஒட்டுமொத்த குரலில் வேதனையுடன் கூறுகின்றனர்.
இதைவிட கொடுமையான மற்றொரு விஷயம் என்னவென்றால், கூடுவாஞ்சேரியில் இருந்து பூந்தமல்லி வழியாக ஆவடி செல்லும் வெளிவட்ட நெடுஞ்சாலையில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாமல், வெறும் காட்சி பொருளாக மாறியுள்ளது. இதனால் அப்பகுதியில் 4 பக்கத்தில் இருந்து வாகனங்கள் அனைத்தும் சிக்னலின் நடுவே எந்த பக்கம் செல்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘சென்னை புறநகர் பகுதிகளில் புதிதாக உருவாகும் வெளிவட்ட சாலை மற்றும் நகர் பகுதிகளில் அந்தந்த நகராட்சி பகுதிகளில் கணக்கு காட்டுவதற்காக போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்படுகின்றன.அவற்றுக்கு தேவையான மின்சாரம் மற்றும் கணினி செயல்பாடுகள் குறித்து எந்த அதிகாரிகளும் ஆளுங்கட்சி நிர்வாகிகளும் கவலைப்படுவதில்லை. அங்கு ஏதேனும் பெரிய விபத்து நடைபெற்றால்தான், ஒருசில நாட்களுக்கு அதிகாரிகள் கவலைப்படுகின்றனர்.அதன்பிறகு அப்பகுதியின் பிரச்னையை அனைவரும் மறந்துவிடுகின்றனர். இவை அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தேவையான நிதியையும் ஆட்களையும் ஒதுக்க சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.
இப்பிரச்னைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.