சிவகாசி பட்டாசு கடை விபத்தில் 8 பேர் பலி - கடை உரிமையாளர் உட்பட 2 பேர் சரண் ; 4 பேர் தலைமறைவு
10/21/2016 2:43:28 PM
சிவகாசி, -பட்டாசு கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில், 6 பெண்கள் உட்பட 8 பேர் பலியான சம்பவம், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டாசு கடையின் உரிமையாளர் மற்றும் பார்ட்னர் இன்று காலை சிவகாசி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இந்த கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சிவகாசி பைபாஸ் சாலையில் உள்ள பட்டாசு கடையில் நேற்று மதியம் ஒரு மணியளவில் 2 வேன்களில் வந்த பட்டாசு பண்டல்களை இறக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு பண்டல் கீழே விழுந்ததில், உராய்வு ஏற்பட்டு, அதிலிருந்த பட்டாசுகள் வெடித்தாக கூறப்படுகிறது. தீப்பொறிகள் விழுந்ததில் வேன்களில் இருந்த மொத்த பட்டாசுகளும் வெடித்து, சீறிப்பாய்ந்தன. இதில் கடைகளில் இருந்த பட்டாசுகளிலும் தீப்பற்றியது. இதையடுத்து அந்த இடமே ரணகளமானது. பயங்கர சத்தத்துடன் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால், அரை கிமீ சுற்றளவிலும், 100 மீட்டர் உயரத்திலும் கரும்புகை எழுந்தது.
இந்த பட்டாசு கடையை ஒட்டி தனியார் ஸ்கேன் மையம் உள்ளது. பட்டாசுகள் இடைவிடாமல் வெடித்துக் கொண்டிருந்ததால், ஸ்கேன் சென்டரில் ஊழியர்கள், பரிசோதனைக்கு வந்த நோயாளிகள் சிக்கிக் கொண்டனர். அவர்களால் வெளியேற முடியவில்லை. அடுத்த 10 நிமிடத்தில் ஸ்கேன் சென்டரை புகை மண்டலம் சூழ்ந்தது. உள்ளே இருந்தவர்கள் மூச்சுத்திணறலால் கதறி துடித்தனர்.
பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து கொண்டிருந்ததால், தீயணைப்புத் துறையினர், பொதுமக்களால் அந்த இடத்தை நெருங்கக் கூட முடியவில்லை. இதனால் ஸ்கேன் சென்டரில் சிக்கியிருந்த 20க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் ஸ்கேன் சென்டரின் பின்புறம் சென்று, ஜன்னலை உடைத்தனர். உள்ளே மயங்கி கிடந்த அனைவரையும் மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி ஸ்கேன் சென்டர் மேலாளர் பாஸ்கர் (42), உதவியாளர்கள் சொர்ணகுமாரி (36), ராஜா (21), நர்ஸ்கள் காமாட்சி (23), புஷ்பலட்சுமி (35), டைப்பிஸ்ட்கள் வளர்மதி (21), பத்மலதா (30) மற்றும் ஸ்கேன் எடுக்க வந்த 3 மாத கர்ப்பிணி தேவி (19) ஆகிய 8 பேர் பரிதாபமாக அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், ஸ்கேன் சென்டர் டாக்டர் ஜானகிராமன் (29), எஸ்.என்.புரத்தை சேர்ந்த சண்முகராஜ் (21), ஆலங்குளத்தை சேர்ந்த கணேசன் (61) உட்பட 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பட்டாசு பண்டல்களை கவனக்குறைவாக கையாண்டதாக கடை உரிமையாளர் ஆனந்த் (38), இவரது பார்ட்னர் செண்பகராஜன் (44) கட்டிட உரிமையாளர் சுதந்திரராஜன் (54), மேலும் பட்டாசுகளை தவறுதலாக கையாண்டதாக வேன் டிரைவர், லோடுமென்கள் இருவர் என 6 பேர் மீது சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இன்று காலை கடை உரிமையாளர் ஆனந்த் மற்றும் பார்ட்னர் செண்பகராஜன் ஆகியோர் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கட்டிட உரிமையாளர் உட்பட 4 பேரை தேடி வருகின்றனர்.விபத்தில் பலியான 8 பேரது உடல்களும், பிரேத பரிசோதனைக்கு பின்னர், அவர்களது உறவினர்களிடம் நேற்று இரவு ஒப்படைக்கப்பட்டன. பலியானவர்களின் உறவினர்களின் கதறியழுத சம்பவம், நெஞ்சை உருக்குவதாக அமைந்திருந்தது.