கயத்தாறு அருகே பஸ்சுக்கு காத்திருந்த பெண் மின்னல் தாக்கி சாவு - 15 ஆடுகளும் பலியான பரிதாபம்
10/21/2016 2:36:05 PM
கயத்தாறு, -கயத்தாறு அருகே பஸ்சுக்காக காத்திருந்த பெண், மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். இதே போல் மற்றொரு இடத்தில் மின்னல் தாக்கியதில் 15 ஆடுகள் பரிதாபமாக இறந்தன. நெல்ைல திருவேங்கடத்தில் ஒரு பசு இறந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த திருமலாபுரம் மேலத் தெருவைச் சேர்ந்த இசக்கிமுத்து மனைவி லட்சுமி (45). இவரும், அதே ஊரைச் சேர்ந்த அய்யம்மாள் (57), குருசாமி மகள் அபிநயா (9) ஆகிய 3 பேரும் தீபாவளியை முன்னிட்டு ஜவுளி எடுக்க முடிவு செய்தனர். இதற்காக கயத்தாறு செல்ல பஸ்சை எதிர்பார்த்து திருமலாபுரம் விலக்கில் நேற்று மாலை காத்திருந்த போது இடி - மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது இவர்கள் மீது திடீரென மின்னல் தாக்கியது. இதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் அய்யம்மாளும், அபிநயாவும் படுகாயமடைந்தனர். இதையடுத்து இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இவர்களில் அய்யம்மாள் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். மின்னல் தாக்கி இறந்த லட்சுமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மற்றொரு சம்பவம்: கயத்தாறு அருகேயுள்ள சன்னது புதுக்குடியைச் சேர்ந்தவர் உய்க்காட்டான் (45). இவர் தனக்குச் சொந்தமான 70 ஆடுகளை தனது மாமா ஆறுமுகத்துடன் அப்பகுதியில் மேய்க்கச் சென்றார். திரும்பி வந்தபோது பலத்த மழை பெய்தது.இதனால் ஊருக்கு தெற்கே சாஸ்தா கோயில் அருகேயுள்ள ஆலமரத்தின் கீழே ஒதுங்கி நின்றனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இதில் உய்க்காட்டனுக்கு சொந்தமான 15 ஆடுகள் துடிதுடித்து இறந்தன. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் அப்பகுதி மக்கள் சோகத்தில் உள்ளனர்.