குமரி முழுவதும் விடிய விடிய மழை
10/21/2016 2:33:54 PM
நாகர்கோவில், -குமரி மாவட்டம் முழுவதும் நேற்று தொடங்கி விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக நீர் வரத்தும் சற்று அதிகரித்து உள்ளது.குமரி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை பொய்த்து போனதன் காரணமாக தற்போது அணைகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக குமரி மாவட்டத்தில் லேசாக மழை பெய்ய தொடங்கியது. நேற்று காலையில் பல்வேறு இடங்களில் சாரல் இருந்தது. நாகர்கோவில் நகரிலும் நேற்று மதியத்துக்கு பின்னர், அவ்வப்போது விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. மாவட்டத்தின் பிற இடங்களிலும் பரவலாக மழை இருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு முதல் நாகர்கோவில் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. இந்த மழை இன்று காலை வரை நீடித்தது. இந்த மழை காரணமாக ஆறுகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. நாகர்கோவில் நகரில் பாதாள சாக்கடைக்காக சாலைகள் தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ளன. நேற்று இரவு பெய்த மழை காரணமாக சாலைகளில் இன்று வாகனங்கள் செல்ல முடியாமல் திணறின. பல சாலைகளில் தண்ணீர் தேங்கி, நடந்து செல்ல முடியாத நிலை இருந்தது. இதற்கிடையே நேற்று இரவு பல்வேறு இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.