புழல் தனியார் மரக்கிடங்கு காவலாளி கொலையில் அசாம் வாலிபர் கைது - கூட்டாளிக்கு வலை
10/21/2016 2:32:16 PM
புழல், -சென்னை புழல் சைக்கிள் ஷாப், ஜிஎன்டி சாலையில் தனியாருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட மரக் கிடங்குகள் உள்ளன. இங்கு 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இங்குள்ள ஒரு மரக்கிடங்கில், செங்குன்றம் அடுத்த காந்தி நகர், திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்த ஆறுமுகம் (60) என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்தார். இங்கு பணியாற்றும் ஊழியர்கள் காலையில் வேலைக்கு வந்தால், மதியம் உணவுக்காகவும், மாலை வேலை முடிந்துதான் வெளியே செல்ல முடியும்.
ஆனால், இங்கு பணியாற்றும் ஊழியர்கள், மேலாளருக்கு தெரியாமல் அடிக்கடி வெளியே சென்றுவிட்டு வருவார்கள் என கூறப்படுகிறது. இதை காவலாளி ஆறுமுகம் தட்டி கேட்பார். இதனால் ஆறுமுகத்துக்கும், இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் அடிக்கடி அடிதடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கடந்த 9ம் தேதி இரவு மீண்டும் ஊழியர்கள் வெளியே சென்றுள்ளனர். இதனால் ஆறுமுகம் அவர்களை தடுத்து, ‘நீங்கள் இதேபோல் தொடர்ந்து செய்தால் என் வேலை போய்விடும். உள்ளே செல்லுங்கள். இல்லாவிட்டால், குடோன் முதலாளியிடம் புகார் செய்வேன்’ என கூறியதாக தெரிகிறது.
இதனால், ஆறுமுகத்துக்கும் குடோன் ஊழியர்களுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த 4 ஊழியர்கள், அருகில் இருந்த உருட்டுக் கட்டையால் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இப்புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காவலாளியைத் தாக்கிய குடோன் ஊழியர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும், புழல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரித்தனர்.
போலீஸ் விசாரணையில், அசாம் மாநிலம் கொல்கம்பூரி பகுதியை சேர்ந்த நீர்உசேன் (24) என்பவர், அசாம் மாநிலத்தில் தலைமறைவாக இருப்பது தனிப்படை போலீசாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன் அசாம் மாநிலத்துக்கு தனிப்படை போலீசார் சென்றனர்.
அங்கு தலைமறைவாக சுற்றி திரிந்த நீர்உசேனை கைது செய்து, நேற்று முன்தினம் இரவு சென்னை கொண்டு வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‘காவலாளி ஆறுமுகத்தை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகிவிட்டார். இதனால் எங்களை போலீஸ் பிடித்துவிடும் எனக் கருதி, எனது சொந்த ஊரில் தலைமறைவாகிவிட்டேன்’ என நீர்உசேன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து அவரை நேற்று சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி வசந்தகுமார் வீட்டில் போலீசார் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.