6 ரன்னில் நியூசிலாந்து த்ரில் வெற்றி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததே தோல்விக்கு காரணம் - டோனி வேதனை
10/21/2016 2:24:35 PM
புதுடெல்லி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 242 ரன் மட்டுமே எடுத்தது. பின்னர் பேட் செய்த இந்தியா 49.3 ஓவர்களில் 236 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக கேதர் ஜாதவ் 41, டோனி 39 ரன் எடுத்தனர். 9வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்ட்யா-உமேஷ் யாதவ் ஜோடி 49 ரன் சேர்த்து போராடியது. 8 பந்துகளுக்கு 11 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பந்தை தூக்கி அடித்து பாண்ட்யா ஆட்டமிழந்தார். அவர் 36 ரன் எடுத்தார். அதன்பின் உமேஷ் யாதவ் 4 ரன் சேர்த்தார். ஆனால் பும்ரா தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே போல்டாகி கடைசி விக்கெட்டாக அவுட்டானார். உமேஷ் யாதவ் 18 ரன்னுடன் களத்தில் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3, குப்தில், போல்ட் தலா 2, சாண்ட்னர், ஹென்ரி தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தோல்வி குறித்து இந்திய கேப்டன் டோனி கூறுகையில், நான் அதிரடியாக விளையாட வேண்டும் என நினைத்தேன். ஆனால் மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருக்கும்போது, இது எளிதான காரியம் அல்ல. பெரிய ஷாட்களை விளையாட விரும்பும்போது, மறுமுனையில் விக்கெட் சரிந்தால், மீண்டும் பார்ட்னர்ஷிப்பை கட்டமைக்க வேண்டியது அவசியமாகிறது. 310 ரன் போன்ற பெரிய ஸ்கோரை சேஸ் செய்ய முயற்சிக்கும்போது, மன நிலை வேறு மாதிரியாக இருக்கும். ஆனால் 240-245 போன்ற ரன்னை, சற்றே கடினமான டிராக்கில் சேஸ் செய்ய முயற்சிக்கும்போது, அது வேறு மாதிரியாக இருக்கும். வில்லியம்சனின் 2 கேட்சுகளை வேறு தவற விட்டு விட்டோம். இது மட்டுமின்றி நியூசிலாந்து பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினர். அதே சமயத்தில் நாங்களும் நன்றாகவே பந்து வீசினோம். அமித் மிஸ்ரா முக்கியமான சில விக்கெட்டுகளை (வில்லியம்சன், டெய்லர், கோரி ஆண்டர்சன்) கைப்பற்றினார் என்றார். 118 ரன் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், எங்களின் பந்து வீச்சே வெற்றிக்கு காரணமாக அமைந்தது. டிரண்ட் பவுல்டின் பந்து வீச்சு அபாரமாக இருந்தது என்றார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்கும் நிலையில், 3வது போட்டி வரும் 23ம் தேதி மொகாலியில் நடைபெறுகிறது.