பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி
10/21/2016 2:23:30 PM
ஓடென்ஸ்: டென்மார்க் சூப்பர் சீரியஸ் பிரீமியர் பேட்மின்டன் தொடர் நடந்து வருகிறது. ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து, சிறிய இடைவெளிக்கு பிறகு இந்த தொடரில் கலந்து கொண்டார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2ம் சுற்றில் அவர், 12ம் நிலை வீராங்கனையான ஜப்பானின் சகாயா சாட்டோவை எதிர்கொண்டார். இதில், 13-21, 23-21, 18-21 என்ற செட் கணக்கில், பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி கண்டார். இந்த போட்டி ஒரு மணி நேரம் 5 நிமிடங்கள் நடந்தது. ஒலிம்பிக்கில் படைத்த சாதனைக்கு பிறகு பி.வி.சிந்து கலந்து கொண்ட முதல் தொடர் இதுதான். இதில், 2வது சுற்றுடன் அவர் வெளியேறியிருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும் அடுத்த வாரம் நடைபெற உள்ள பிரெஞ்ச் ஓபனில் பி.வி.சிந்து பங்கேற்பார். இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவுகளில் இந்தியாவின் அஜய் ஜெய்ராம், பிரணாய் ஆகியோரும் 2ம் சுற்றில் தோல்வியை தழுவினர். 21-23, 15-21 என்ற செட் கணக்கில் சீனாவின் ஷி வியூகியிடம் அஜய் ஜெய்ராமும், 10-21, 20-22 என்ற செட் கணக்கில் முன்னணி வீரரான மலேசியாவின் லீ சோங் வெய்யிடம் பிரணாயும் தோல்வியடைந்தனர்.