இன்று உலக கோப்பை கபடி அரையிறுதி தாய்லாந்தை வீழ்த்தி பைனலுக்குள் நுழையுமா இந்தியா? - மற்றொரு போட்டியில் தென் கொரியா- ஈரான் மோதல்
10/21/2016 2:22:55 PM
அகமதாபாத்: ஆடவர் 3வது உலக கோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்து வருகிறது. 12 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஏ, பி என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டன. ‘ஏ’ பிரிவில் தென்கொரியா 5 போட்டிகளிலும் வெற்றியுடன் 25 புள்ளிகள் பெற்று முதல் இடத்தையும், இந்தியா 4ல் வெற்றிபெற்று 21 புள்ளிகளுடன் 2வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றன.இந்த பிரிவில் வங்கதேசம் 16 புள்ளி, இங்கிலாந்து 10 புள்ளி, ஆஸ்திரேலியா 5 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடத்தையும், அர்ஜென்டினா புள்ளி எதுவும் பெறாமல் கடைசி இடத்தையும் பிடித்து வெளியேறியது.
‘பி’ பிரிவில் தாய்லாந்து, ஈரான் அணிகள் தலா 4 வெற்றி, 1 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று சமநிலை பெற்றன. ஆனால் ரெய்டு புள்ளிகளில் தாய்லாந்து முதல் இடத்தையும், ஈரான் 2வது இடத்தையும் பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. கென்யா (16 புள்ளி) 3வது இடத்தையும், ஜப்பான் (12 புள்ளி) 4வது இடத்தையும், போலந்து (11 புள்ளி) 5வது இடத்தையும், அமெரிக்கா (0 புள்ளி) கடைசி இடத்தையும் பிடித்து வெளியேறின.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் முதல் அரைஇறுதியில் ‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த தென்கொரியா- ‘பி’ பிரிவில் 2வது இடத்தை பிடித்த ஈரான் அணிகள் மோதுகின்றன. இரவு 9 மணிக்கு நடை பெறும் 2வது அரை இறுதியில் ‘ஏ’ பிரிவில் 2வது இடத்தை பிடித்த இந்தியா- ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த தாய்லாந்துடன் மோதுகிறது. முதல் லீக் போட்டியில் தென்கொரியாவுடன் 32-34 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்த நடப்பு சாம்பியன் இந்தியா, அடுத்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது. மறுபுறம் ஈரானுடன் மட்டும் தோல்வி அடைந்த தாய்லாந்து அணியும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. சொந்த மண்ணில் கூடுதல் பலத்துடன் ஆடும் இந்தியாவிற்கு தாய்லாந்து கடும் நெருக்கடி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.